தமிழ்நாடு

தமிழ்த்தென்றல் திரு.வி.கல்யாணசுந்தரம் பிறந்த நாள் இன்று..!

தமிழ்த்தென்றல் திரு.வி.கல்யாணசுந்தரம் பிறந்த நாள் இன்று..!

Veeramani

கவிஞர், விடுதலை போராட்ட வீரர், மேடைப் பேச்சாளர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர் என பன்முகத் திறன் கொண்ட ‘தமிழ்த் தென்றல்’ திரு.வி.கல்யாணசுந்தரம் பிறந்தநாள் இன்று.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் துள்ளம் என்னும் சிற்றூரில் 1883-ஆம் ஆண்டு பிறந்த இவர், தமிழ் அறிஞர் யாழ்ப்பாணம் நா.கதிரவேற் பிள்ளையிடம் யாப்பிலக்கணமும், தமிழும் கற்றார். பின்னர்  மயிலை மகாவித்வான் தணிகாசல முதலியாரிடம் வடமொழி, சைவ சமய நூல்களையும், பாம்பன் சுவாமிகளிடம் உபநிடதங்களையும், அப்துல் கரீமிடம் திருக்குர்ஆனும் கற்றார். ஜஸ்டிஸ் சதாசிவராவ் தொடர்பால் ஆங்கில அறிவுவும் பெற்றார். சென்னை மகாஜன சங்கக் கூட்டத்தில் ‘இனி எங்கும் எவரும் தமிழிலேயே பேசவேண்டும்’ என்ற தீர்மானத்தைக் கொண்டுவந்தவர் இவர். சென்னையில் காந்தியடிகள் ஆற்றிய உரையை அற்புதமாக மொழிபெயர்த்து காந்தியடிகளிடம் பாராட்டு பெற்றார்.

1909 இல் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள வெஸ்லியன் பள்ளியில் ஆசிரியராகச் சேர்ந்து ஆறு ஆண்டுகள் பணி புரிந்தார். பின்னர் இராயப்பேட்டை வெஸ்லி கல்லூரியில் தலைமை ஆசிரியராகச் சேர்ந்தார், நாட்டிற்கு உழைப்பதற்காக அவர் அப்பணியில் இருந்து விலகினார். பின்னர் தேசபக்தன், திராவிடன்  பத்திரிகைகளில் ஆசிரியராக இருந்து நாட்டு விடுதலைக்குத் தொண்டாற்றினார் திரு.வி.க அவர்கள். சென்னையில் 1918-ல் முதன்முதலாக தொழிற்சங்கம் உருவானதில் இவரது பங்கு மகத்தானது. அச்சகத் தொழிலாளர்களுக்கான சங்கங்கள் உருவாகவும் காரணமாக இருந்தார். 1920-ல் நவசக்தி வார இதழைத் தொடங்கி 20 ஆண்டுகள் திறம்பட  நடத்தினார். 

முருகன் அல்லது அழகு, திருக்குறள் விரிவுரை, தமிழ்நாட்டு செல்வம், தமிழ்க்கலை, கிறிஸ்துவின் அருள் வேட்டல் , மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், நாயன்மார் வரலாறு, தேசபக்தாமிர்தம், இராமலிங்க சுவாமிகள் திருவுள்ளம், சைவத்திறவு என பல்வேறு துறைகளில் 50க்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்துள்ளார் இவர் .