தமிழ்நாடு

ஐந்து பைசாவிற்கு ஒருகிலோ கோழிக்கறி - திறப்புவிழா அறிவிப்பால் கடையில் குவிந்த மக்கள் அலை

ஐந்து பைசாவிற்கு ஒருகிலோ கோழிக்கறி - திறப்புவிழா அறிவிப்பால் கடையில் குவிந்த மக்கள் அலை

kaleelrahman

உசிலம்பட்டியில் கோழி கறிக்கடை திறப்பு விழா சலுகையாக ஐந்து பைசாவிற்கு ஒரு கிலோ கோழிக்கறி விற்பனை செய்யப்பட்டதால் குவிந்த நூற்றுக்கணக்கான மக்களால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் பிராய்லர் கோழிக்கடை நிறுவனம் உசிலம்பட்டி பேரையூர் ரோட்டில் புதிய கிளையை திறந்தது. இந்த கடையின் திறப்புவிழாவை முன்னிட்டு திறப்புவிழா சலுகையாக ஐந்து பைசா நாணயத்திற்கு ஒருகிலோ கோழி கறி வழங்கப்படும் என போஸ்டர் அடித்து உசிலம்பட்டி முழுவதுமாக ஒட்டப்பட்டிருந்தது.

இந்நிலையில், திறப்புவிழாவின் போது நூற்றுக்கணக்கான மக்கள் ஐந்து பைசா நாணயத்துடன் கோழிக்கறி வாங்க குவிந்தனர். இதனால் உசிலம்பட்டி பேரையூர் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் போக்குவரத்தையும், பொதுமக்கள் கூட்டத்தையும் கட்டுப்படுத்தினர்.

பழைய நாணயங்களை பாதுகாக்கும் முயற்சியாக அறிவிக்கப்பட்ட இந்த சலுகை. ஒரு சிலரிடம் மட்டுமே ஐந்து பைசா நாணயம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நூற்றுக்கணக்கான மக்கள் ஐந்து பைசா நாணயத்துடன் குவிந்தது இன்னும் கிராம மக்கள் பழமை மாறாமல் உள்ளதை காட்டுவதாக கடையின் விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.