Annamalai RS Bharathi pt desk
தமிழ்நாடு

"இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தை கொச்சைப்படுத்துவதா?"-அண்ணாமலைக்கு ஆர்.எஸ்.பாரதி காட்டமான பதில்

இந்தி எதிர்ப்பு போராட்டம் பிஞ்சுபோன செருப்பு என கூறிய அண்ணாமலை விமர்சனத்திற்கு, அந்த செருப்பாலயே மக்கள் பதில் கூறுவார்கள் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ்.பாரதி பதிலளித்துள்ளார்.

webteam

செய்தியாளர்: ஆவடி நவீன்குமார்

அம்பத்தூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் இந்தியா கூட்டணியின் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற வேட்பாளர் டி.ஆர்.பாலுவை ஆதரித்து அம்பத்தூரில் முகவர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, வேட்பாளர் டிஆர்.பாலு, அமைச்சர் சேகர்பாபு, திமுக செய்தி தொடர்பாளர் பிரசன்னா, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Modi & Amit shah

இந்த நிகழ்ச்சியில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசியபோது,

“இந்த தேர்தலில் நரேந்திர மோடியின் வாய்ஜாலம் பலிக்காது. அவர்களுக்கு தோல்வி பயம் வந்து விட்டது. தேர்தலுக்குப் பின்னர் எப்படி ஒளிவது, எங்கு போவது என்ற யோசனையில் உள்ளனர். மோடியின் ஊழல், உலகம் முழுவதும் விமர்சனம் செய்யும் விதமாக இருந்து வருகிறது.

தேர்தலில் போட்டியிட பணம் இல்லை என நிர்மலா சீதாராமன் ஏதோ உத்தமியை போல பேசி வருகிறார்.

பாஜக சார்பில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளரது வங்கிக் கணக்கிலும் ரூ.25 லட்சமும், ஒவ்வொரு மாவட்ட பாஜகவிற்கும் ரூ.50 லட்சமும் வங்கிக் கணக்கிற்கு வந்துள்ளது. இவ்வளவு பணம் செலவு செய்து விட்டு நிர்மலா சீதாராமன் பணம் இல்லை என நடித்தால் மக்கள் ஏற்றுக் கொள்வார்களா?

Nirmala Sitharaman

தமிழகத்திற்கு அமித்ஷா, மோடி, மத்திய அமைச்சர்கள் பலமுறை வர உள்ளனர். தேர்தலில் தில்லுமுல்லு செய்ய திட்டமிட்டுள்ளனர். தேர்தல் ஆணையத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க உள்ளேன். நான் வழக்கு தொடர்ந்தால் ஒன்று சிறை இல்லையென்றால் காலியாகி விடுவார்கள். வாக்குப்பதிவு எந்திரத்தில் புதிய திட்டத்தை செயல்படுத்த உள்ளனர். கன்ட்ரோல் யூனிட் பயன்படுத்தக் கூடாது என வழக்குத் தொடர உள்ளேன். இதை வைத்துதான் 400 என கூறி வருகின்றனர். இது நிறுத்தப்பட்டால் கதை முடிந்தது. கலைஞர் நினைத்து நடக்காதது சேது சமுத்திர திட்டம் தான். அதை சுப்ரமணிய சுவாமி சிலரின் தூண்டுதலில் வழக்குத் தொடர்ந்து நிறுத்தி விட்டார். இந்தமுறை டெல்லியில் ஆட்சி அமைந்தால், டி.ஆர்.பாலு வெற்றி பெற்றால் சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்தி கப்பலில் முதல்வர் ஸ்டாலின் பயணம் செய்வார்” என்று ஆர்எஸ்.பாரதி பேசினார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ் பாரதி, இந்தி எதிர்ப்பு போராட்டம் பிஞ்சு போன செருப்பு எனக் கூறிய அண்ணாமலை விமர்சனத்திற்கு பதிலளிக்கும் வகையில், அந்த செருப்பாலயே மக்கள் பதில் கூறுவார்கள் என்று காட்டமான பதிலளித்தார்.