தமிழ்நாடு

தேர்தல் பணியிலிருந்து விடுவிக்க வேண்டும்: கைக்குழந்தையுடன் காத்திருந்த அரசுப் பணியாளர்

தேர்தல் பணியிலிருந்து விடுவிக்க வேண்டும்: கைக்குழந்தையுடன் காத்திருந்த அரசுப் பணியாளர்

Veeramani

தேர்தல் பணியில் இருந்து விடுவிக்க, தத்தெடுத்த கைக்குழந்தையுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருந்த அங்கன்வாடி பணியாளரின் செயல் நெகிழ்ச்சியை உருவாக்கியது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மொளச்சூர் கிராமத்தில் உள்ள பள்ளியில் அங்கன்வாடி பணியாளர் ஆக பணிபுரிந்து வரும் பத்மாவதி என்பவருக்கு, திருமணம் ஆகி கடந்த 15 ஆண்டு காலமாக குழந்தை இல்லாமல் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் மத்திய அரசின் குழந்தை தத்தெடுப்பு இணையதளத்தின் வாயிலாக குழந்தையை தத்தெடுக்க வேண்டி பத்மாவதி தம்பதியினர் பதிவு செய்திருந்தனர். இந்நிலையில் கடந்த 10ஆம் தேதி மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து பெண் குழந்தை ஒன்று இருப்பதாக இத்தம்பதியினருக்கு மத்திய அரசின் மூலம் தகவல் கிடைத்துள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைந்த தம்பதியினர் மகாராஷ்டிரா சென்று அங்கே இருக்கக்கூடிய மாவட்ட குழந்தை நல அலுவலரின் அனுமதியோடு 3 மாத பெண் குழந்தையை தத்து எடுத்து மகிழ்ச்சியுடன் தமிழகம் வந்துள்ளனர்.

தற்போது தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் பணி விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய சூழலில் பத்மாவதிக்கும் தேர்தல் பணி வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று ஸ்ரீபெரும்புதூரில் இருந்து சுமார் 60 கிலோமீட்டர் தொலைவிலுள்ள காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு, மூன்று மாத குழந்தையுடன் கடும் வெயிலில் வந்த பத்மாவதி தம்பதியினர், தன்னை தேர்தல் பணியிலிருந்து விடுவிக்குமாறு மனு அளித்தார்.

ஆனால் மகப்பேறு மூலம் குழந்தை பெற்றால்தான் விடுப்பு வழங்க இயலும், குழந்தை தத்தெடுத்து இருப்பதால் விடுப்பு வழங்க வழிவகை இல்லை என சம்பந்தப்பட்ட அதிகாரி தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் செய்வதறியாமல் பத்மாவதி தம்பதியினர் குழந்தையுடன் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் காத்திருந்தனர். இவருடைய நிலையை கருத்தில் கொண்டு மனு மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைக்கப்படும். அதன்பிறகு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தேர்தல் நடத்தும் அதிகாரி தெரிவித்ததால் அதன்பிறகு அவர்கள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

பெண்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்குவது குழந்தை பெற்றுக்கொள்வதற்காக அல்ல, குழந்தையை பராமரிப்பதற்காகவே என்பதனால் இந்த தம்பதியினருக்கு தேர்தல் பணியில் இருந்து விடுப்பு வழங்கி குழந்தையை பராமரிக்க விடுப்பு வழங்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.