தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் நேர்காணலில் குலுக்கல் முறையில் நேர்காணல் குழுவை தேர்வு செய்யும் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய முறைப்படி, தங்களை நேர்காணல் நடத்தும் குழுவை நேர்காணலுக்கு 15 நிமிடங்களுக்கு முன்பு சீட்டை தேர்வு செய்வதன் மூலம் தேர்வரே தேர்வு செய்வார். தேர்வர் மட்டுமின்றி நேர்காணலை நடத்தும் டி.என்.பி.எஸ்.சி அதிகாரியோ, உறுப்பினரோ, வல்லுநரோ குலுக்கல் முறையிலேயே, தான் இடம்பெற உள்ள நேர்காணல் குழுவின் எண்ணை தேர்வு செய்வார்.
அறிமுகப்படுத்தப்பட உள்ள இந்த புதிய முறையால் முறைகேடுகளை தடுக்க முடியும் என டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது. இந்த நடைமுறை நாட்டிலேயே முதல் முறையாக டி.என்.பி.எஸ்.சி-யால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே, வேளாண் பொறியாளர், புள்ளியியல் ஆய்வாளர் பணிகளுக்கான நேர்காணல் இந்த புதிய முறையிலேயே நடத்தப்பட்டிருக்கிறது. இனி வரும் அனைத்து நேர்காணல்களும் இந்த முறையிலேயே நடத்தப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.