சென்னை மணலியில் உள்ள துணை மின் நிலையத்தில், உயர் மின் அழுத்தம் காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இதனால் சென்னையின் பெரும்பாலான இடங்களில் மின்விநியோகம் பெரிதும் பாதிக்கப்பட்டது. குறிப்பாக, திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, வியாசர்பாடி, ஆவடி, அம்பத்தூர், மந்தைவெளி, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்பட்டதால் மக்கள் அவதியடைந்தனர். மணலியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், சென்னையின் பெரும்பாலான இடங்களில் நள்ளிரவில் மின்தடை ஏற்பட்டது குறித்து மின்வாரியம் விளக்கம் அளித்துள்ளது. அதில், மணலி துணை மின்நிலையத்தில் ஏற்பட்ட தீ உடனடியாக கட்டுப்படுத்தப்பட்டதாகவும், போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு நூறு விழுக்காடு மின்சாரம் சரி செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மின்தடை காரணமாக சென்னையில் அத்தியாவசிய சேவைகளில் பாதிப்பு ஏற்படவில்லை என மின்வாரியம் விளக்கம் அளித்துள்ளது.