தமிழ்நாடு

பறவையின் குஞ்சுகளுக்காக ஒன்றரை மாதம் தெரு விளக்கை அணைத்த கிராமம்!

பறவையின் குஞ்சுகளுக்காக ஒன்றரை மாதம் தெரு விளக்கை அணைத்த கிராமம்!

webteam

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பொத்தகுடி என்ற கிராமம், ஒரு பறவையின் வீட்டைப் பாதுகாப்பதற்காக கிட்டத்தட்ட 40 நாட்கள் தெருக்களில் உள்ள மின்சார விளக்குகளை அணைத்து இருட்டில் வாழ்ந்து வருகிறது. 

சிவகங்கை மாவட்டம் பொத்தகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பு ராஜா. இவரது வீடு கிராமத்தின் இறுதி எல்லையில் உள்ளது. இதனால் கிராமத்தின் 35 தெருக்களில் உள்ள மின்விளக்குகளின் மொத்த மின் இணைப்பு சுவிட்ச்சானது இவரது வீட்டின் அருகில் உள்ளது. மாலை ஆறு மணிக்கு இந்த சுவிட்சை ஆன் செய்யும் கருப்பு ராஜா காலை 5 மணிக்கு மீண்டும் அதனை அணைத்து விடுவார். இதனை அவர் அவரது சிறு வயதில் இருந்தே செய்து வருகிறார். 

ஒரு நாள் மதிய வேளையில் விட்டை விட்டு வெளியே சென்ற கருப்பு ராஜா, மின் இணைப்பின் மெயின் பாக்ஸ் அருகே ஒரு நீல நிறப்பறவை இருப்பதைக் கண்டார். ஆர்வத்தில் சற்று நெருங்கி பார்த்த போது அந்தப் பறவை குச்சிகளையும், வைக்கோலையும் சேகரித்து அதற்கான கூட்டை கட்டிகொண்டிருந்துள்ளது. அடுத்த நான்கு நாட்களில், அந்தப் பறவையானது அது கட்டியக் கூட்டில் மூன்று முட்டைகளை பொரித்துள்ளது.

இதனைக் கண்டு பூரிப்படைந்த கருப்பு ராஜா, அடுத்தடுத்த நாட்களில் அதனை தொந்தரவு செய்யாமல் இருக்க வேண்டும் என்று நினைத்துள்ளார். ஆனால் அவ்வாறு இருந்தால் தெருக்களில்  இரவு நேர  மின் இணைப்பானது துண்டிக்கப்படும். இதனால் தெருக்களில் வசிக்கும் வீட்டு உரிமையாளர்கள் வாட்ஸ் ஆப் எண்ணை தொடர்பு கொண்டு நடந்த சம்பவத்தை விவரித்து, மின் இணைப்பை துண்டிக்க அவர்களது அனுமதியை கோரியுள்ளார் ராஜா. வாயில்லா ஜீவனின் நிலைமையை புரிந்து கொண்ட மக்கள் பலர் அதற்கு ஒப்புக் கொண்டனர். ஆனால் அதில் சிலர் ஒரு சிறிய பறவைக்காக இவ்வளவு பெரிய நடவடிக்கையா என கேள்வியும் எழுப்பினர். 

இதனை தொடர்ந்து கருப்பு ராஜா பொத்தகுடி பஞ்சாயத்து தலைவர்களான அர்ஜீனன் மற்றும் காளீஸ்வரியைத் தொடர்பு கொண்டு நடந்தச் சம்பவத்தை கூறி சம்பவ இடத்திற்கும் அவர்களை அழைத்து வந்து காண்பித்துள்ளார்.

இது குறித்து அர்சுணன் கூறும் போது “ ராஜா முதலில் இந்த விஷயத்தைப் பற்றி என்னிடம் கூறும் போது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அதன் பின்னர் பறவை இருந்த இடத்தை பார்த்தேன். அந்தப் பறவை முட்டைகளைப் பாதுகாக்க வைக்கோல், இலைகள், குச்சிகளை வைத்து அதனது வீட்டை அமைத்திருந்தது. இந்த ஊரடங்கு காலத்தில் பல மக்கள் வசிப்பதற்கு இடம் கிடைக்காமல் தெருக்களில் சுற்றி வருகின்றனர். அதே நிலைமை இந்தப் பறவைக்கும் வந்து விடக் கூடாது என்பதற்காக நான் மின் இணைப்பை துண்டிக்க ஒத்துக் கொண்டேன்.

மெயின் பாக்ஸ்க்குச் செல்லும் மின் கம்பி வெட்டப்பட்டவுடன், அந்த மின் கம்பி பறவையின் மீது படாமல் இருப்பதற்காக அதைச் சுற்றிலும் டேப் ஒட்டப்பட்டது. இதனையடுத்து ஒவ்வொரு வீடாகச் சென்று இரவில் சிறிது கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தினோம்.” என்றார்.

இது குறித்து கருப்பு ராஜா கூறும் போது “ பறவைகள் முட்டையிட்டு 40 நாட்கள் ஆன நிலையில் தற்போது அதில் மூன்று குஞ்சுகள் உள்ளன” என்றார். பறவையானது தனது கூட்டை விட்டுச் சென்றவுடன் மீண்டும் மின் இணைப்பு வழங்கப்படும் என்று பஞ்சாயத்து தலைவர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.