ponmudy and appavu PT
தமிழ்நாடு

மீண்டும் சட்டமன்ற உறுப்பினராக ஆகிறாரா பொன்முடி? சபாநாயகர் அப்பாவு சொன்ன முக்கிய தகவல்!

சொத்துக்குவிப்பு வழக்கில் கிடைத்த தண்டனையை எதிர்த்து பொன்முடி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், தண்டனையை நீதிமன்றம் நிறுத்தி வைத்தது. இந்நிலையில், அவர் மீண்டும் எம்.எல்.ஏ ஆவாரா என்பது குறித்து சபாநாயகர் அப்பாவு பதிலளித்துள்ளார்.

யுவபுருஷ்

செய்தியாளர் - மருதுபாண்டி

தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு திருநெல்வேலி சந்திப்பு பெரியார் பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை இன்று திறந்து வைத்தார்.

அதனை தொடர்ந்து மகளிர் சுய உதவி குழுக்கள் தயாரித்த பொருட்களின் கண்காட்சி மற்றும் விற்பனையையும் பார்வையிட்டார். தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “உயர் கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி ஒரு வழக்கில் தண்டனை பெற்றதால் அவர் சட்டப்பேரவை உறுப்பினராக நீடிக்க முடியாது என உத்தரவிடப்பட்டது.

இதற்கிடையே தன் மீதான தீர்ப்பு தொடர்பாக அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். அதை நேற்று விசாரித்த உச்சநீதிமன்றம், அவருடைய தண்டனையை நிறுத்தி விதித்துள்ளது. எனவே அவருக்கு மீண்டும் எம்.எல்.ஏ ஆகும் வாய்ப்பு வழங்குவது தொடர்பாக விரைவில் முடிவெடுக்கப்படும்.

சபாநாயகர் அப்பாவு

குறிப்பாக வயநாடு மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி, லட்சத்தீவு மக்களவை உறுப்பினர் முகமது பைசல், காசிப்பூர் மக்களவை உறுப்பினர் அன்சாரி ஆகியோரின் விவகாரத்தில் என்ன மாதிரியான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதோ, அதே நடவடிக்கை பொன்முடி விவகாரத்திலும் எடுக்கப்படும். உச்சநீதிமன்ற தீர்ப்பின் நகல் கிடைத்த பிறகு சட்டப்பேரவை முதன்மைச் செயலருடன் பேசி தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும்” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, சொத்துக்குவிப்பு வழக்கில் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையை எதிர்த்து முன்னாள் அமைச்சர் பொன்முடி மேல்முறையீடு செய்திருந்தார். உச்சநீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய அமர்வில், பொன்முடி மற்றும் அவரது மனைவி தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணை நேற்று நடந்தது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் அமர்வு, சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடி குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட தீர்ப்பினை மட்டும் நிறுத்திவைத்தது. இதற்கிடையே, ராகுல் காந்தி போன்றோர் வழக்குகளில் எப்படி அவர்கள் மீண்டும் உறுப்பினராக தொடர்ந்தார்களோ, அதே பாணியில் பொன்முடியும் சட்டமன்ற உறுப்பினராக தொடர்வார் என்பதையே சபாநாயகர் அப்பாவுவின் பேச்சு காட்டுகிறது.