தமிழக சட்டப்பேரவை நாளை கூடவுள்ள நிலையில், அடுத்த நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்திருந்தார்.
சபாநாயகர் அப்பாவு தெரிவித்த தகவலின்படி, நாளை காலை 10 மணிக்கு நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்யவுள்ளார். கடந்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு மார்ச் மாதத்தில் அதிமுக அரசு சார்பில் இடைக்கால நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. பிறகு திமுக ஆட்சிக்கு வந்ததும், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி, திருத்திய நிதிநிலை அறிக்கையை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். தற்போது அவர் இரண்டாவது முறையாக நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யவிருக்கிறார். கொரோனா காரணமாக வருவாய் பற்றாக்குறை அதிகரிக்க வாய்ப்புள்ள நிலையில், வரும் நிதியாண்டில் அதை குறைப்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரசின் வருவாயைப் பெருக்கும் வகையில் நிதிநிலை அறிக்கையில் திட்டங்கள் இடம்பெறக்கூடும் எனத் தெரிகிறது. மாதந்தோறும் மின்கட்டணம் கணக்கிடுவது, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உதவித் தொகை உள்ளிட்ட திமுகவின் தேர்தல் அறிக்கை வாக்குறுதிகள் குறித்த அறிவிப்புகள் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறுமா என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் பொது நிதிநிலை அறிக்கையும் தனி வேளாண் நிதிநிலை அறிக்கையும் தாக்கல் செய்யப்படவுள்ளன. தனி வேளாண் நிதிநிலை அறிக்கையை, நாளை மறுநாள் வேளாண்மைத் துறை அமைச்சர் தாக்கல் செய்வார் எனத் தெரிகிறது.
சமீபத்திய செய்தி: “கியூபா போல உலகுக்கு முன் உதாரணமாக உள்ளது தமிழகம்”- அமைச்சர் மா.சுப்ரமணியன் பெருமிதம்