தமிழ்நாடு

ஸ்டெர்லைட் ஆலைக்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி மறுப்பு

ஸ்டெர்லைட் ஆலைக்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி மறுப்பு

rajakannan

ஸ்டெர்லைட் ஆலையின் உரிமத்தைப் புதுப்பிக்கக் கோரி சமர்ப்பித்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருப்பதாக ஆலை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் உறுதி செய்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலை, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய நிபந்தனைகளை நிறைவேற்றாததால் ஆலை இயக்க கோரும் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது என தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘தூத்துக்குடி மாவட்டம், மீளவிட்டான் கிராமத்தில் இயங்கி வரும் வேதந்தா குழுமத்தைச் சேர்ந்த ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை அலகு-1ஐ 31.3.2018-க்கு பிறகு தொடர்ந்து நடத்துவதற்கு விண்ணப்பித்திருந்தது. அவ்விண்ணப்பத்தை பரிசீலித்தபோது, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் நிபந்தனைகளை, அக்குழுமம் சரிவர நிறைவேற்றவிலை என்ற காரணத்தினால் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வேதாந்தா குழுமத்தின் விண்ணப்பத்தினை நிராகரித்துள்ளது” என்று தெரிவித்துள்ளது.

இதுகுறித்த தகவலை தேசிய பங்குச்சந்தைக்கு கடிதம் மூலம் வேதாந்தா நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆலையின் உரிமம் புதுப்பித்தலுக்கு விண்ணப்பித்திருந்ததாகவும், கூடுதல் விவரம் கேட்டு அந்த விண்ணப்பத்தை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நிராகரித்திருப்பதாகவும் கடிதத்தில் கூறப்பட்டிருக்கிறது. இதுதொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலை நிர்வாகம் ஆலோசித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பராமரிப்புப் பணிக்காக 15 நாள்களுக்கு ஆலை மூடப்பட்டுள்ள நிலையில், உரிமம் புதுப்பித்தல் தொடர்பான நடவடிக்கைகளால் ஆலை திறப்புக்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் போராடி வரும் நிலையில், ஆலையைத் திறப்பதற்கான உரிமம் புதுப்பிப்பதற்கு அனுமதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்தத் தகவலை மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் உறுதி செய்துள்ளது. 

இதனிடையே, ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி மறுத்திருப்பது பாராட்டுக்குரியது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.