தேனியில் முதல்வர் பிரசார கூட்டத்தில் வாகனத்தில் சென்ற பெண்ணை கன்னத்தில் அறைந்த சிறப்பு சார்பு ஆய்வாளர் முருகேசன் ஆயுதப் படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தேனி மக்களவைத் தொகுதி, பெரியகுளம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து, தேனி நேரு சிலை அருகே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார். இதனால் நேரு சிலை அருகே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் ஊர்ந்து சென்றன. அப்போது வாகனங்கள் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கியது. அதில் டாடா மேஜிக் வாகனம் நெருக்கடியில் சிக்கிய சூழலில் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த சிறப்பு சார்பு ஆய்வாளர் முருகேசன், வாகனத்தை வேகமாக இயக்குமாறு ஓட்டுநரை கேட்டுக் கொண்டார்.
அப்போது முருகேசனை நோக்கி கையெடுத்து கும்பிட்ட ஒரு பெண்ணை அவர் கன்னத்தில் வேகமாக அறைந்தார். இதனால் அந்த பெண் நிலைகுலைந்தார். கையெடுத்துக் கும்பிட்ட பெண்ணை காவலர் கன்னத்தில் அறைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் வாகனத்தில் சென்ற பெண்ணை கன்னத்தில் அறைந்த சிறப்பு சார்பு ஆய்வாளர் முருகேசன் ஆயுதப் படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார். மேலும் துணை கண்காணிப்பாளர் தலைமையில் வீடியோ அடிப்படையில் விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளார்.