பிரேமலதா விஜயகாந்த் மீதும், பா.ஜ.க தமிழக தலைவர் முருகன் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்த ஜெயஸ்ரீ என்கிற பத்தாம் வகுப்பு மாணவி கடந்த சில நாள்களுக்கு முன்னர் வீட்டில் தனியாக இருந்தபோது பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டார்.
உடனடியாக அக்கம்பக்கத்தினர் அந்த சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். இதையடுத்து சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார். முன்னதாக சிறுமி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் முருகன் உள்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ஜெயஸ்ரீயின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து நேற்று ஆறுதல் கூறினார். ₹1 லட்சம் நிதியுதவியும் செய்தார். அதேபோல் பா.ஜ.க தமிழக தலைவர் முருகனும் ஜெயஸ்ரீயின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
இந்நிலையில் பிரேமலதா விஜயகாந்த் மீதும், முருகன் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஊரடங்கு அமலில் இருக்கும்போது அதனை மீறும் விதமாக 30 மேற்பட்டவர்களுடன் கூட்டமாக வந்ததால் இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.