Palanivel Thiaga Rajan Facebook
தமிழ்நாடு

”யாராக இருந்தாலும் பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதி!” - மதுரை சித்திரை திருவிழா ஏற்பாடுகள் தீவிரம்!

PT WEB

மதுரை சித்திரைப் பெருவிழா முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகள், அலுவலர்கள் உடனான ஆலோசனை கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

மதுரை ஆட்சியர் அனீஷ் சேகர், மாநகராட்சி ஆணையர் சிம்ரன் ஜீத் சிங், காவல் ஆணையர் நரேந்திரன் நாயர், மீனாட்சி அம்மன் கோவில், அழகர் கோவில் துணை ஆணையர்கள், பொதுப்பணி, மருத்துவம், தீயணைப்பு உள்ளிட்ட துறைகளின் அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்றனர்.

பெருந்திரளான மக்கள் கூட்டம் பங்கேற்கும் நிகழ்வுகளான மீனாட்சி திருக்கல்யாணம், தேரோட்டம், அழகர் ஆற்றில் இறங்கும் விழா ஆகியவை நடைபெறும் இடங்களில் செய்ய வேண்டிய வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், கடந்த ஆண்டு அழகர் ஆற்றில் இறங்கும் விழாவின் போது பாதுகாப்பு குளறுபடிகளால் கூட்ட நெரிசல் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகளை தவிர்ப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

கூட்டத்தில் பேசிய நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தீயாகராஜன்,

''கடந்த ஆண்டு நானே நேரில் ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கியும் குளறுபடிகள் நடந்துள்ளது. இந்தாண்டு அழகர் ஆற்றில் இறங்கும் இடத்தில் பாஸ் இல்லாமல் அதிகாரிகளோ, வி.ஐ.பி.,யையோ யாரையும் அனுமதிக்க கூடாது, திருக்கல்யாணத்துக்கு வருபவர்களை மாசி வீதிகளிலேயே பரிசோதித்து அனுப்ப வேண்டும், சித்திரை திருவிழாவில் மீனாட்சி திருக்கல்யாணம், கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் இடத்தில் பாஸ் இருந்தால் மட்டுமே யாராக இருந்தாலும் உள்ளே அனுமதிக்க வேண்டும். அந்த அதிகாரிகளுக்கு தெரிந்தவர்கள், பெரிய நபர்களுக்கு தெரிந்தவர்கள் என 10-20 பேரை மொத்தமாக உள்ளே விடக்கூடாது.

மீனாட்சி திருக்கல்யாணத்திற்கு அமைச்சரான நான் வந்தால் கூட நெருக்கடி ஏற்படும், காவல்துறை எனக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டியிருக்கும் என்பதால் நானோ என் குடும்பமோ திருக்கல்யாண நிகழ்ச்சியில் பங்கேற்பதில்லை.

சித்திரை திருவிழாவிற்கு முன்பே பார்க்கிங் பகுதிகளை அகற்ற வேண்டும்.போக்குவரத்து துறை அதிக கவனம் செலுத்தி நெருக்கடியை குறைக்க வேண்டும். கடந்த ஆண்டு நடந்தது போல விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெறக்கூடாது. அனுமதி அட்டையை சோதனையை செய்து பாஸ் இருந்தால் மட்டுமே காவல்துறையினர் உள்ளே அனுமதிக்க வேண்டும்.

அரசு ராஜாஜி மருத்துவமனையில் பிரத்யேக மருத்துவ குழு தயார் நிலையில் இருக்க வேண்டும், அனுமதிக்கப்படும் பக்தர்கள் குறித்த விபரங்களை முறையாக கையாள வேண்டும்" என்றார்.

கூட்டத்தில் அமைச்சர் மூர்த்தி பேசுகையில்,

''கடந்த ஆண்டு போல ஒரு அசம்பாவிதம் கூட இந்தாண்டு நடைபெற கூடாது. அதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் சரியாக மேற்கொள்ள வேண்டும். நெரிசலை தவிர்க்க, சித்திரை பொருட்காட்சி நடைபெறும் தமுக்கம் மைதானத்திற்குள் பொது மக்கள் அனைவரையும் அனுமதிக்க வேண்டும்" என்றார்.

மதுரை சித்திரை திருவிழா ஆலோசனைக் கூட்டத்தில் மதுரை மாநகர காவல் ஆணையர் நரேந்திரன் பேசுகையில்,

"கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து போலீசார் பாதுகாப்பு பணிக்கு ஈடுப்படுத்தப்பட உள்ளனர். அழகர் வரும் சாலையான புதூர் மூன்றுமாவடி உள்ளிட்ட பகுதிகளில் 130 சிசிடிவி கேமரா புதிதாக பொருத்தப்பட்டுள்ளது. போலீஸ் உடை, சாதாரண உடையில் குற்ற சம்பவம் நடைபெறாமல் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட இருக்கின்றனர்” என்றார்.

அதே போன்று இந்து அறநிலையத்துறை சார்பில் அழகர் ஒவ்வொரு மண்டகப்படிக்கு செல்லும் என்பது போன்ற நேரம் Timeshort குறித்து கொடுத்தால் காவல்துறையினருக்கு உதவியாக இருக்கும். நீதிபதிகள் மற்றும் விஐபி உள்ளிட்டோர் தனி கார் பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது எனக் கூறினார்.

மதுரை மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன்ஜித் சிங் பேசும் போது,

”சித்திரை திருவிழாவிற்கு மாநகராட்சி சார்பில் குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, தற்காலிக கழிப்பிட வசதி, 27 மெடிக்கல் மொபைல் டீம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அழகர் ஆற்றில் இறங்கும் போது மக்கள் ஆற்றினுள் இறங்க வசதி செய்யப்பட்டு சீர்படுத்தி வருகிறோம்” என்றார்.

சித்திரை திருவிழாவை முன்னிட்டு 30-ம் தேதி வைகையாற்றில் தண்ணீர் திறக்கப்பட இருப்பதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தார்.