தமிழ்நாடு

புயல் பாதிப்புகளை தமிழக அமைச்சர்கள் நாளை ஆய்வு

webteam

‘கஜா’ புயலையொட்டி ஏற்பட்ட சேதங்களை ஆய்வு செய்து, அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்காக நாளை பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக அமைச்சர்கள் பார்வையிடுகின்றனர்.

‘கஜா’ புயல் நாகை, தஞ்சை, திரு‌வாரூர் என 6 மாவட்டங்களை புரட்டிப்போட்டுச் சென்றிருக்கிறது. நேற்றிரவு முழுவதும் கோரத் தாண்டவமாடிய ‘கஜா’ புயலில் அதிகம் பாதிப்புக்கு ஆளானது நாகை மாவட்டம் வேதாரண்யம் தான். இந்தப் புயலின் தாக்கத்தால், வேதாரண்யம் தனித் தீவாகவே மாறியுள்ளது.‘கஜா’ புயல் எதிரொலி காரணமாக பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. 

‘கஜா’ புயல் கரையைக் கடக்கும் போது 110 கிமீ வேகத்தில் காற்று வீசியது. இதனால் 13,000 மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன, சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்களும் சாய்ந்திருக்கின்றன. 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். இந்தக் கடுமையான புயலால் தமிழகம் முழுவதும் உயிரிழந்துள்ளோரின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது. 

‘கஜா ’புயலால் மின்சாரம், சாலை வசதி  இன்றி மக்கள் தவிக்கின்றனர். எனவே அடிப்படை வசதிகளை உடனடியாகச் செய்துதர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தச் சுழலில் தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ‘கஜா’ புயலால் ஏற்பட்ட சேதங்களை வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் மற்றும் கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் ஆகியோர் நாளை பார்வையிடுகின்றனர். இதனிடையே ‘கஜா’ புயலால் உயிரிழந்தவர்களின்‌ குடும்பங்களுக்கு‌ தலா 1‌0 லட்சம் ரூபாய் நி‌தியுதவி அளிக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.