“பிரதமரை சந்திக்க காரணம் இதுதான்!” - அமைச்சர் பிடிஆர் கொடுத்த விளக்கம்! pt web
தமிழ்நாடு

“பிரதமரை சந்திக்க காரணம் இதுதான்!” - அமைச்சர் பிடிஆர் கொடுத்த விளக்கம்!

கடந்த 27 ஆம் தேதி அமைச்சர் பிடிஆர் பிரதமரை சந்தித்தற்கான காரணம் என்னவென்று தற்போது விளக்கம் அளித்துள்ளார்.

ஜெனிட்டா ரோஸ்லின்

இதுநாள் வரையிலும் தமிழகத்துக்கு அதிகம் வராத பிரதமர் மோடி, இந்த வருடம் தொடக்கத்தில் மட்டும் 4 முறை தமிழகப் பயணம் மேற்கொண்டுள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் சூழலில் பிரதமரின் இந்த அடுத்தடுத்த வருகைகள் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

இதில் கடந்த மாத இறுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் ’என் மண் என் மக்கள்’ என்ற கூட்டம் நிறைவு விழாவில் கலந்து கொள்ள பல்லடம் வந்த பிரதமர், அதனையடுத்து தூத்துக்குடி நெல்லைக்கும் சென்றிருந்தார்.

வழியில் மதுரைக்கு சென்ற பிரதமரை கடந்த 27 ஆம் தேதி அவர் தங்கியிருந்த ஓட்டலில் சந்தித்திருந்தார் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன். இதையடுத்து பிரதமர் மோடியை அமைச்சர் பிடிஆர் ரகசியமாக சந்தித்ததாக செய்திகள் வலம் வர தொடங்கின. இந்நிலையில் பிரதமர் உடன் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பாஜகவினர் சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார்கள் என்று புகார் எழுந்துள்ளது.

தொடர்ந்து இது பேசுபொருளான நிலையில், பிரதமருடனான சந்திப்பு குறித்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கமளித்துள்ளார். அதில், “தவறான வதந்திகளை பரப்பி வருகிறார்கள். அந்தச் சந்திப்பில் எந்த அரசியலும் இல்லை. நான் அரசாங்கத்தின் கடமையைதான் செய்தேன். ஜனநாயக அமைப்பின் ஒரு முக்கிய பொறுப்பில் பிரதமர் உள்ளார். ஆகவே மரியாதை செலுத்துவது அரசாங்கத்தின் கடமை.

அரசாங்க பணியின் காரணமாகவே நான் பிரதமரை சந்தித்தேன், தவிர தனிப்பட்ட விருப்பத்திற்காக அல்ல. முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து ஒரு பணியை செய்ய எனக்கு ஒரு கட்டளை வந்தது. அதைதான் நிறைவேற்றினேன்.” என்று விளக்கமளித்துள்ளார்.

இது குறித்து பத்திரைகையாளர் சுவாமிநாதன் நம்மிடையே தெரிவிக்கையில், “இதனை தனிப்பட்ட சந்திப்பாக பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. அரசாங்கம் சார்ந்த சந்திப்பு என்று அவரே தெரிவித்துள்ளார். முதல்வர் அண்மையில் கூட அமைச்சர் பி.டி.ஆர்-ஐ பாராட்டி இருந்தார்.

மேலும், இந்த புகைப்படம் குறித்து அமைச்சரே விளக்கம் ஒன்றிணையும் அளித்துள்ளார். அதில், ‘நான் பிரதமரை சந்தித்ததை எங்கும் வெளியிட விரும்பவில்லை. சந்திப்பின்போது அவர் அருகில் இருந்த பாஜகவினர்தான் இதனை சர்ச்சையாக கிளப்பி வருகிறார்கள்’ என்று விளக்கமும் அளித்துள்ளார்.

ஆகவே, இந்த புகைப்படம் அரசாங்க ரீதியாக வந்திருந்தால் நிச்சயம் சர்ச்சையாக மாறியிருக்காது. இந்த விதத்தில்தான் இதனை புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.

மூத்த பத்திரிகையாளர் துக்ளக் ரமேஷ், இது குறித்து தெரிவிக்கையில், “பிரதமரை அமைச்சர் சந்திப்பதாக இருந்திருந்தால் அன்று இரவே அரசாங்கத்தின் செய்தி குறிப்பில் வந்திருக்க வேண்டும் அல்லது பேட்டியளித்திருக்க வேண்டும்.

ஆனால் அப்படி எதுவும் நடைபெறாமல் சில நாட்களுக்கு பிறகு வெளிவந்துள்ளது வியப்பினை அளிக்கிறது. முன்னதாக இவர் இலாக்கா மாற்றப்பட்டிருந்தார். அதுவும் இங்கே கேள்வியை எழுப்பும் ஒன்றாக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.