புதிய கல்விக் கொள்கை முகநூல்
தமிழ்நாடு

"புதிய கல்விக் கொள்கையில் இணையக்கூறி மத்திய அரசு அழுத்தம் கொடுக்கிறது" - அமைச்சர் அன்பில் மகேஸ்

“நிதியை விடுவிப்பதற்கு பதில், தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கிறார்கள்” என மத்திய பாஜக அரசு மீது அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி குற்றச்சாட்டு

PT WEB

செய்தியாளர் - பிருந்தா

அமரர் அன்பில் பொய்யாமொழியின் 25 ஆம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி திருச்சியில் உள்ள திமுக தெற்கு மாவட்ட அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு, அன்பில் பொய்யாமொழி அவர்களின் மகனும் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர்,

“அனைவருக்கும் கல்வி திட்டத்தில், மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய பங்கீடு தொகையான 573 கோடி ரூபாய் இதுவரை விடுவிக்கப்படவில்லை. இது குறித்து, முதல்வரும் அமெரிக்கா செல்வதற்கு முன்பு மத்திய அரசை வலியுறுத்தி விட்டுச்சென்றார்.

மேலும் இதுகுறித்து நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி தலைமையில், தமிழக எம்பிகள் அனைவரும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை நேரில் சந்தித்தோம். அப்போதும் இந்த கோரிக்கை குறித்து நேரில் வலியுறுத்தினோம். மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு இதில் அரசியல் செய்ய வேண்டாம் என்று நேரடியாக வலியுறுத்தினோம்.

ஆனால், அவர்கள் ‘தேசிய கல்விக் கொள்கையில் இணைந்தால் மட்டுமே இந்த பணத்தை வழங்க முடியும்’ என்று கூறுகிறார்கள். குறிப்பாக, ‘புதிய கல்விக் கொள்கையைக் கொண்ட பிஎம்ஸ்ரீ திட்டத்தில் மாநில அரசு இணைய வேண்டும்’ என மத்திய அரசு தெரிவிக்கிறது. இதற்கும் அதற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. தேசிய கல்விக் கொள்கை 2020ம் ஆண்டுதான் அமல்படுத்தப்பட்டது. ஆனால் அதற்கு முன்பே அனைவருக்கும் கல்வி திட்டம், 2018ம் ஆண்டில் அமல்படுத்தப்பட்டு விட்டது.

எனவே, இந்த விஷயத்தில் அரசியல் செய்யாமல் உடனடியாக பணத்தை மத்திய அரசு விடுவிக்க வேண்டும். நிதியை விடுவிப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. தேசியக் கல்விக் கொள்கையை தமிழகம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தொடர்ந்து மத்திய அரசு அழுத்தம் கொடுக்கிறது. ஆனாலும், மும்மொழிக் கொள்கையை ஒருபோதும் தமிழகம் ஏற்றுக்கொள்ளாது.

மத்திய அரசு நிதி வழங்காததால் ஏற்பட்டுள்ள நிதிச் சுமையை சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகளை தமிழக முதல்வர் மேற்கொண்டு வருகிறார். தமிழகத்தில் உள்ள ஆசிரியர்கள் சம்பளம் உள்ளிட்ட செலவினங்களில் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வண்ணம் தொடர்ந்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது” என்றார்