அமைச்சர் அன்பில் மகேஸ் PT Web
தமிழ்நாடு

“மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அழுத்தம் தருகின்றனர்” - அமைச்சர் அன்பில் மகேஸ்

“மும்மொழி கொள்கை ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று மத்திய அரசு அழுத்தம் தருகிறது. இதுபோன்ற திட்டங்கள் இல்லாமலே நம்மால் நன்றாக செயல்பட முடிகிறது என்பதை நம்மிடமிருந்து அவர்கள் கற்றுக் கொள்ளாமல் இருப்பது வருத்தத்தை தருகிறது” - அமைச்சர் அன்பில் மகேஸ்

PT WEB

செய்தியாளர்: ஐஸ்வர்யா

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிட்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ், “மத்திய அரசு நம் மாநில அரசுக்கு தரவேண்டிய தொகையில் முதல் தவணை ரூ. 573 கோடி வராமல் உள்ளது. 32,298 ஆசிரியர்களுக்கு ஊதியம் கொடுப்பதற்கான தொகை அது. அதை மத்திய அரசு கொடுக்காமல் உள்ளதால் மாநில நிதியில் கொடுக்கலாம் என்று முடிவெடுத்துள்ளோம். 

அமைச்சர் அன்பில் மகேஸ்

மத்திய மாநில அரசுகளின் நிதிப்பகிர்வின்கீழ் பல்வேறு திட்டங்களை தமிழக அரசு சார்பில் செயல்படுத்தி வருகிறோம். திடீரென அவற்றை எந்த காரணமும் சொல்லி நிறுத்திவிடக்கூடாது என்று டெல்லி சென்று தொடர்ந்து துறை சார்பில் வலியுறுத்தப்படுகிறது.

27 வகையான பயன்பாடுகள் மத்திய அரசு நிதியில் சார்ந்துள்ளது. உதாரணத்துக்கு கலை பண்பாட்டு, எண்ணும் எழுத்தும் கற்றல் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் 60:40 (மத்திய மாநில நிதியில்) என்ற அடிப்படையில் செயல்படுத்தி வரும் நிலையில், திடீரென அவற்றை நிறுத்துவோம் என்று அவர்கள் சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாதது. பள்ளி சேர்க்கை 62% என்று சொல்லும் நிலையில், தமிழகத்தில் அதை தாண்டி சென்று கொண்டிருக்கிறோம்.

மொத்தம் 20 மத்திய அரசு திட்டங்களில் 18 ல் தமிழகம் முதன்மையாக உள்ளது. அதனைப்பார்த்து, ‘உங்களிடமிருந்து மற்ற மாநிலங்களுக்கு எடுத்து கொண்டு போகிறோம், உங்களிடம் இருந்து கற்றுக் கொள்கிறோம்’ என்று சொல்வது ஆரோக்கியமானது.

அதைவிடுத்து, நன்றாக செயல்படும் மாநிலத்தில் ‘இந்த கொள்கையை ஏற்றுக்கொண்டால்தான் நிதி வழங்க முடியும்’ என சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாதது. நடைபெற்று வரும் திட்டங்களுக்கு தடை ஏற்படுத்தும் வகையில் நிதியை தடுக்கின்றனர் என்றபோதிலும், மாநில நிதியில் நாங்கள் திட்டங்களை நடத்தி வருகிறோம்.

சி.பி.எஸ்.சி., பள்ளிக்கான கட்டணம் தொடர்பாக கண்காணிப்போம். அதுதொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம். மாநில மாணவர்கள் நம்முடைய மாணவர்கள் என்பதால் கட்டமைப்பு  உள்ளிட்டவைகள் தொடர்பாக கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டத்தில் 5 ஆண்டுகளில் 7,500 கோடி நிதியில் 18,000 வகுப்புகள், ஆய்வரைகள், கழிவறைகள் திட்டமிட்டு, இந்தாண்டு கூடுதலாக 1,000 கோடி ஒதுக்கி கூடுதல் பணிகள் நடைபெற்று வருகின்றன. மாணவர்கள் மரத்தடியில் உட்கார்ந்தோ, சிதலமடைந்த பள்ளி கட்டிடத்திற்ககுள் உட்கார்ந்தோ படிக்கக்கூடாது என பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.

அமைச்சர் அன்பில் மகேஸ்

6-9 ஆம் வகுப்பு குழந்தைகளுக்கு கற்றல் குடைபாடுகளுக்கான சிறப்பு வகுப்புகள் ஏற்கனவே வழங்கப்படுகிறது. இவையாவும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கை கொடுக்கும்.

மும்மொழி கொள்கை ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று மத்திய தரப்பினர் அழுத்தம் தருகின்றனர். இதுபோன்ற திட்டங்கள் இல்லாமலே நம்மால் நன்றாக செயல்பட முடிகிறது என்பதை நம்மிடமிருந்து அவர்கள் கற்றுக் கொள்ளாமல் இருப்பது வருத்தத்தை தருகிறது” என்றார்.