தமிழ்நாடு

தமிழக சிறுவர்களிடையே அதிகரிக்கும் போதை ஊசி பழக்கம்... அதிர்ச்சி தகவல்..!

தமிழக சிறுவர்களிடையே அதிகரிக்கும் போதை ஊசி பழக்கம்... அதிர்ச்சி தகவல்..!

webteam

தமிழ்நாட்டில் சிறுவர்களிடையே ஊசி மூலம் பயன்படுத்தும் போதை பொருள் பழக்கம் அதிகரித்து வருதாக தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. 

தமிழ்நாட்டில் சிறுவர்களிடையே ஊசி மூலம் பயன்படுத்தும் போதை பொருள் பழக்கம் அதிகரித்து வருவதாக தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் வருத்தத்துடன் பதிவு செய்துள்ளது. இதுதொடர்பாக இந்த ஆணையத்தின் உறுப்பினர் ஆர்.ஜி.ஆனந்த், “புதுக்கோட்டை மாவட்டத்தில் நான்கு சிறுவர்கள் போதை பொருளை பயன்படுத்தியது எங்களுக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. இந்தச் சம்பவம் தொடர்பாக நாங்கள் முழு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளோம். 

இதன் முதற்கட்ட விசாரணையில் சிறுவர்கள் புற்றுநோயாளிகளுக்கு வழங்கப்படும் குறைந்த விலை வலி நிவாரண மாத்திரையை தண்ணீருடன் சேர்த்து போதை பொருளாக ஊசியின் உதவியுடன் பயன்படுத்துகின்றனர் என்று தெரியவந்துள்ளது. மேலும் இந்த மாத்திரைகள் 12 முதல் 15 ரூபாய் விலையில் கிடைப்பதால் சிறுவர்களுக்கு இவை எளிதில் கிடைக்கும் சூழல் உருவாகியுள்ளது. 

இந்தமுறையில் போதை பொருட்களின் பயன்பாடு இந்தியாவில் 19 மாநிலங்களில் இருந்தாலும் தமிழ்நாட்டில் தற்போது இது அதிகரித்துள்ளது. முன்பாக மிசோரம் மாநிலத்தில் இந்தப் போதை பொருள் பயன்பாடு அதிகமாக இருந்தது. ஆனால் ஹெச்.ஐ.வி உண்டாகும் பயத்தால் இது அங்கு குறைந்து வருகிறது. தமிழ்நாட்டில் நடைபெற்ற இந்தச் சம்பவம் குறித்து பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சகத்திற்கு விரிவான அறிக்கை அளிக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.