தமிழ்நாடு

‘பார்சலுக்கு பாத்திரங்களுடன் வந்தால் டிஸ்கவுண்ட்’ - தமிழக ஹோட்டல்கள் புது ஆஃபர்

‘பார்சலுக்கு பாத்திரங்களுடன் வந்தால் டிஸ்கவுண்ட்’ - தமிழக ஹோட்டல்கள் புது ஆஃபர்

webteam

உணவுப் பொருட்களை வாங்குவது தொடர்பாக தமிழ்நாடு ஹோட்டல்கள் சங்கம் புது அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கும் கொள்கையை நாட்டில் பல்வேறு மாநிலங்கள் கடைபிடிக்க தொடங்கியுள்ளன. முதல்கட்டமாக மாகாராஷ்டிரா தான் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடைவிதித்தது. அதன்படி ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களான பை, ஸ்பூன், தட்டுகள், பாட்டில்கள், தெர்மகோல் உள்ளிட்ட பொருட்களை உற்பத்தி மற்றும் விற்பனை செய்ய தடைவிதிக்கப்பட்டு வருகின்றனர்.

2019ம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்படுவதாக முதலமைச்சர் பழனிசாமி கடந்த ஜூன் மாதம் சட்டசபையில் அறிவித்தார். அப்போது, பால் பாக்கெட், தயிர், எண்ணெய், மருத்துவப் பொருட்களுக்கு மட்டும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தலாம் எனவும் முதலமைச்சர் தெரிவித்தார். பொதுமக்களும். வியாபாரிகளும் இதற்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

முதலமைச்சர் பழனிசாமி அறிவித்த பிளாஸ்டிக் தடை அமலுக்கு வர இன்னும் 4 மாதங்கள் உள்ள நிலையில், தமிழ்நாடு ஹோட்டல்கள் சங்கம் புதிய முடிவினை எடுத்துள்ளது. உணவு வாங்க வரும் வாடிக்கையாளர்கள் பைகளோ, பாத்திரங்களையோ கொண்டுவந்தால், விலையில் 5 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்துள்ளார். 10 ஆயிரம் உறுப்பினர்கள் உள்ள இந்த சங்கத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

இதுதொடர்பாக சென்னை ஹோட்டல்கள் சங்க தலைவர் ரவி கூறுகையில், “சராசரியாக ஒவ்வொருவருக்கும் பில் தொகையில் பார்சலுக்கு மட்டும் 3 முதல் 4 சதவீதம் ஆகிறது. அதனால், வாடிக்கையாளர்கள் அவர்களாகவே பாத்திரங்களை கொண்டு வந்தால், அவர்களுக்கு இந்தச் சலுகை கிடைக்கும். இந்த அறிவிப்பை தங்களது ஹோட்டல்களில் பலகையில் எழுதி வைக்குமாறும் உறுப்பினர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளோம். வாடிக்கையாளர்களிடமும் இதுகுறித்து தெரிவிக்குமாறும் வலியுறுத்தியுள்ளோம்” என்றார்.

சங்கத்தின் செயலாளர் ஸ்ரீனிவாசன் கூறுகையில், “மாநிலம் முழுவதும் சுமார் 2 லட்சம் ஹோட்டல்கள் உள்ளன. வேலூர், சிதம்பரம் மற்றும் மதுரை உள்ளிட்ட பகுதிகளில் ஏற்கெனவே ஹோட்டல்கள் உரிமையாளர்கள் இதனையை நடைமுறைப்படுத்த தொடங்கிவிட்டனர். 40 வருடங்களுக்கு முன்பு எல்லோரது வீட்டிலும் சாப்பாடு கொண்டு செல்வதற்கு சில்வர் மற்றும் வெண்கல பாத்திரங்கள் இருக்கும்” என்றார்.

பிளாஸ்ட் தடை அமலுக்கு வந்த பிறகு உடனடியாக எல்லோவற்றையும் நிறுத்த முடியாது என்பதால் முன்கூட்டியே இந்த நடைமுறையை ஹோட்டல்கள் தொடங்கியுள்ளது. சில ரெஸ்டாரண்ட்களில் வாழை இலை மற்றும் தையல் இலைகளில் உணவு பார்சல் செய்யப்படுகிறது. ஹோட்டல் உரிமையாளர்கள், அலுமினியம் பேப்பர் போன்ற மாற்று வழிகளை யோசித்து வருகிறார்கள். 

Courtesy - The Hindu