புனேவிலிருந்து கொரோனா தடுப்பூசியான கோவிஷீல்டு மருந்துகள் இன்று காலை தமிழகத்திற்கு வர உள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் உள்ள சீரம் இன்ஸ்டியூட், கோவிஷீல்டு என்ற பெயரில் தயாரித்துள்ளது. வரும் 16ஆம் தேதி முதல் நாடு முழுவதும் முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசிப் போடப்பட உள்ளது. இதற்காக மகாராஷ்ட்ரா மாநிலம் புனேவில் உள்ள சீரம் நிறுவனத்திலிருந்து 13 பகுதிகளுக்கு விமானம் மூலம் தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
அதன்படி இன்று கோவிஷீல்டு தடுப்பூசிகள் தமிழகம் வர உள்ளன. முதல்கட்டமாக 5 லட்சத்து 56 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் கொண்டுவரப்பட உள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சீரம் நிறுவனத்திடமிருந்து ஒரு கோடி தடுப்பூசிகளை வாங்குவதற்கு மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ள நிலையில், ஒரு டோஸ் மருந்து 200 ரூபாய்க்கு கிடைக்கும் என சீரம் நிறுவனம் கூறியுள்ளது.