தமிழ்நாடு

“குடிநீர் சிக்கனம், தேவை இக்கணம்” - தமிழக அரசு அறிவுறுத்தல்

webteam

வறட்சியால் ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க, குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தும்படி தமிழக மக்களுக்கு அரசு கோரிக்கை வைத்துள்ளது.

நல்ல மழைப்பொழிவு இருந்தால் தான் மக்கள் கோடை காலத்தை போராட்டம் இன்றி கடத்த முடியும். மழைப்பொழிவின் அளவு குறைந்தால் கோடை காலத்தில் அது எதிரொலிக்கும். நிலைமை இப்படி இருக்க இந்த வருடம் மழை பெய்யவே இல்லை. இதனால் சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது. மக்கள் குடிதண்ணீருக்காக திண்டாடி வருகின்றனர். குறிப்பாக சென்னை புறநகர்ப்பகுதிகள் மிகப்பெரிய தண்ணீர் பஞ்சத்தில் சிக்கித் தவிக்கிறது. 

தமிழகத்தில் மட்டுமல்ல மகாராஷ்டிராவிலும் நிலைமை இன்னும் மோசமாகத் தான் இருக்கிறது. மாநிலத்தின் பல பகுதிகளில் தண்ணீர் கிடைக்காமல் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் மழைப்பொழிவை கொடுக்கும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட ஃபோனி புயல் வெப்பநிலையை உயர்த்தி மக்கள் பரிதவிக்க வைத்துள்ளது.

இந்நிலையில் வறட்சியால் ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க, குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தும்படி தமிழக மக்களுக்கு அரசு கோரிக்கை வைத்துள்ளது. இது தொடர்பாக குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் மகேஸ்வரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

அதில் தமிழகம் முழுவதும் குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலமாக பொது மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க 556 கூட்டு குடிநீர் திட்டங்கள் தற்போது பராமரிக்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் மழை நீர் சேமிப்பபை செயல்படுத்த தேவையான தொழில்நுட்பத்தை ஆலோசனைகளை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் அளித்து வருகிறது. எனவே தமிழக மக்கள் அனைவரும் குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம் எனப்  பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.