தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர் இல்லையா? நொந்துபோன தமிழக விவசாயிகள்!

மேட்டூர் அணை நீர் இல்லையா? நொந்துபோன தமிழக விவசாயிகள்!

webteam

மேட்டூர் அணையில் இருந்து இந்த வருடமும் நீர் திறக்க வாய்ப்பில்லை என அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளதால் தமிழக விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

தமிழக விவசாயிகள் குறித்து சேலம் மாவட்டம் ஏற்காட்டில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மேட்டூர் அணையில் மிக குறைவான அளவு தண்ணீர் இருப்பது அனைவருக்கும் தெரியும் என்றார். இதனால் ஜூன் 12-ந் தேதி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுமா? என்பது சந்தேகம் தான் எனக்கூறிய அவர், தற்போது பரவலாக மழை பெய்து வருவதாகவும், இந்த ஆண்டு பருவமழை நன்றாக இருக்கும் என நம்புவதாகவும் கூறினார்.

அவ்வாறு மழை பெய்தால் அணைகள் நிரம்பும் என்ற அவர், விவசாய நலனை பாதுகாக்கவும் தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக தெரிவித்தார். மேலும் விவசாயிகளுக்கு என்ன தேவை என்பதை கண்டறிந்து அவர்களுக்கு உதவி செய்ய தமிழக அரசு தயாராக உள்ளதாகவும் கூறினார்.

காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மேட்டூர் அணையின் கொள்ளளவு 93 டிஎம்சி ஆகும். இந்த அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் 12ஆம் தேதி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். இதன்மூலம் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, கடலூர், புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் உள்ள 16 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறும்.

மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து இந்த அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படாத நிலையில், கடந்த ஆண்டு நீர் திறக்கப்பட்டது. அதற்குக் காரணம் கடந்த ஆண்டு காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவ போதுமான அளவு பெய்ததாகும். ஆனால் இந்த ஆண்டு அணையில் போதிய நீர் இல்லாத காரணத்தால், தண்ணீர் திறக்க வாய்ப்பில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதனால் 11 மாவட்டங்களை சேர்ந்த டெல்டா விவசாயிகளும் வருத்தம் அடைந்துள்ளனர். இதனால் கடைமடை விவசாயிகள் வாழ்வாதாரத்திற்கு வழியின்றி தவித்து நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக கூறும் அப்பகுதி விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரம் விவசாயத்தை நம்பியே இருப்பதாகவும், அதைவிட்டால் ஊரில் பிழைக்க வேறு வழி இல்லை என்றும் கூறுகின்றனர்.

சிலர் தாங்கள் பிழைப்பதற்கு வெளிமாநிலங்கள் செல்லவுள்ளதாகவும், சொந்த ஊரை விட்டுச்செல்லும் நிலை மிகவும் துயரமானது என்றும் வருத்தம் தெரிவித்துள்ளனர். மேலும் டெல்டா விவசாயிகளின் துயரத்தை துடைக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.