தமிழ்நாடு

‘குடிசை இல்லாத சென்னையே அரசின் நோக்கம்’ - ஓ.பி.எஸ் ஓபன் டாக்

‘குடிசை இல்லாத சென்னையே அரசின் நோக்கம்’ - ஓ.பி.எஸ் ஓபன் டாக்

webteam

சென்னையை குடிசை வீடுகள் இல்லாத மாநகரமாக மாற்றுவதே அரசின் நோக்கம் என சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

குடிசைப்பகுதியை மாற்றியமைப்பது குறித்து சட்டப்பேரவையில் இன்று பேசிய ஓ.பன்னீர்செல்வம், கூவம் நதிக்கரையில் வசிக்கும் குடிசைப்பகுதி மக்களுக்கு பெரும்பாக்கத்தில் 20 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டு வருவதாக கூறினார். அதில் 8 ஆயிரம் வீடுகள் பயனாளர்களுக்கு வழங்கப்பட்டு விட்டது என்றும் அவர் தெரிவித்தார். குடிசை வீடுகள் இல்லாத மாநகரமாக சென்னையை மாற்ற வேண்டும் என்பது மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் இலக்காக இருந்தது என்றும், அந்த இலக்கை எட்ட தற்போதைய அரசு தீவிர முயற்சி எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துக்கொண்டார்.

அவரைத் தொடர்ந்து பேசிய சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ், கண்ணகி நகர் பகுதியில் சென்னையை சேர்ந்த குடிசைவாழ் மக்கள் ஆயிரக்கணக்கானோர் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் மறுகுடியமர்வு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். ஆனால் அவர்களுக்கு அடிப்படை வசதி கூட அங்கு இல்லை என்றும், குடிநீர், மின்சாரம், குப்பை எடுப்பதற்கு கூட அங்கு ஆட்கள் வருவதில்லை என்று குறை கூறினார். பல்லாயிரக்கணக்கான மக்கள் வாழும் அந்தப் பகுதியில் சுகாதாரம் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், அங்கு சுடுகாடு ஏற்பாடு செய்து தரவேண்டும் எனவும் தெரிவித்தார்.