தமிழ்நாடு

தமிழகத்தில் மழை வேண்டி கோயில்கள் யாகங்களை நடத்த வேண்டும்: அறநிலையத்துறை உத்தரவு

தமிழகத்தில் கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துள்ளது. தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு மக்கள் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில், மழை வேண்டி தமிழகம் முழுவதும் முக்கிய கோயில்களில் சிறப்பு யாகங்களை நடத்த இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் க.பணீந்திர ரெட்டி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக, ஆணையர்க பணீந்திர ரெட்டி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

நீர் தொட்டி கட்டி நந்தியின் கழுத்துவரை நீர் நிரப்பி வழிபாடு செய்தல், நாதஸ்வரம், வயலின், புல்லாங்குழல், வீணை வாத்தியங்களுடன் அமிர்தவர்ஷினி, மேகவர்ஷினி, கேதாரம், ஆனந்த பைரவி, கல்யாணி போன்ற ராகங்களை இசைத்து வழிபாடு செய்தல், சிவன் கோயில்களில் சிவ பெருமானுக்கு சீதள கும்பம் எனப்படும் தாராபாத்திர நீர் விழா செய்தல், சிவப்பெருமானுக்கு ருத்ராபிஷேகம், மகா விஷ்ணுவுக்கு சிறப்பு திருமஞ்சனம், வருண காயத்ரி மந்திர பாராயணம் உள்ளிட்ட அந்தந்த கோயில்களின் பழக்க வழக்கத்துக்கு உட்பட்டு யாகங்களை நடத்த வேண்டும்.

தங்களது மண்டலத்தில் எந்தெந்த கோயில்களில் எந்த தேதியில் மழை வேண்டி யாகம் செய்யப்பட உள்ளது என்ற விவரப் பட்டியலை வரும் 2-ம் தேதிக்குள் ஆணையர் அலுவலகத்துக்கு அனைத்து மண்டல இணை ஆணையர்களும் அனுப்பி வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.