தமிழ்நாடு

கன்னத்தில் தட்டிய ஆளுநர் - கோபமடைந்த பெண் நிருபர்

கன்னத்தில் தட்டிய ஆளுநர் - கோபமடைந்த பெண் நிருபர்

rajakannan

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் செய்தியாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பிய பெண் நிருபரிடம் நீங்கள் பேத்தி மாதிரி என்று கூறி அவரது கன்னத்தில் தட்டினார். 

பேராசிரியை நிர்மலா தேவி மாணவிகளை தவறாக வழிநடத்துகிறார் என்ற புகார் விஸ்வரூபம் எடுத்து நிலையில், ஆளுநர் பன்வாரிலால் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, ஆளுநரிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை கேட்டு அவரை துளைத்து எடுத்தனர்.  பின்னர் செய்தியாளர் சந்திப்பு முடியும் போது பெண் நிருபர் ஒருவர் ஆளுநரிடம் கேள்வி ஒன்றினை எழுப்பியுள்ளார். அதற்கு நீங்கள் என் பேத்தி மாதிரி என்று கூறிய ஆளுநர் பெண் நிருபரின் கன்னத்தில் லேசாக தட்டினார். 

இந்த சம்பவம் குறித்து அந்த பெண் நிருபர் தனது ட்விட்டர் பக்கத்தில், “செய்தியாளர் சந்திப்பு முடியும் தருவாயில் ஆளுநரிடம் நான் ஒரு கேள்வி எழுப்பினேன். ஆனால், என்னுடைய கேள்விக்கு பதில் அளிக்காமல் ஒரு அதிகாரி என்ற தோரணையில் என் கன்னத்தில் தட்டி அமைதிப்படுத்தினார். என்னுடைய அனுமதி இல்லாமல், என்னுடையா தாத்தா போன்ற வயதுடையவர் என கூறிக் கொண்டு கன்னத்தில் தட்டுவது அவருக்கு சாதாரணமாக இருக்கலாம் , ஆனால் என்னை பொறுத்தவரை அது தவறு” என்று பகிர்ந்துள்ளார். 

பேராசிரியை தொலைபேசி விவகாரத்தில் ஆளுநருக்கு தொடர்புள்ளதாக எதிர்கட்சிகள் சந்தேகம் எழுப்பியுள்ள நிலையில், அது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். பெண் பத்திரிகையாளரும் அது தொடர்பாக கேள்வி எழுப்பியிருந்தார். அவை அனைத்தையும் ஆளுநர் மறுத்து விட்டு, செய்தியாளார் சந்திப்பை முடித்த நிலையில் இப்படியொரு சம்பவம் நடைபெற்றுள்ளது. 

”தனக்கு அறிமுகம் இல்லாத ஒரு நபரின் அதுவும் ஒரு பெண்ணின் கன்னத்தை அவரது அனுமதி இல்லாமல் தொடுவது முறையான நடத்தை அல்ல. என்னுடைய முகத்தை நான் பல முறை கழுவி விட்டேன். இருந்தால் என்னால் அதில் இருந்து மீள முடியவில்லை. அதனால் கோபமும் ஆத்திரமும் அடைந்தேன், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். இதுஒரு தாத்தாவை போன்ற அணுகுமுறையாக இருக்கலாம். என்னைப் பொருத்த வரை அது தவறு” என்றும் அந்த செய்தியாளார் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.