வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச் செல்ல பிரத்யேகமான இணையதள பக்கத்தை தமிழக அரசு உருவாக்க உள்ளது.
கொரோனா வைரஸ் பொது முடக்கத்தால் வெளிநாடுகளில் ஏராளமான தமிழர்கள் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்டு தமிழகம் கொண்டு வர அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்ப விரும்புவோர் nonresidenttamil.org என்ற இணையதளப்பக்கத்தில் பதிவு செய்யலாம் என தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் தமிழகத்தில் சிக்கி இருக்கும் வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்வதற்கும் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகத்தில் 5 லட்சம் வெளிமாநில தொழிலாளர்கள் உள்ள நிலையில் பிரத்யேகமான இணையதள பக்கத்தை தமிழக அரசு இன்று உருவாக்க உள்ளதாக கூறப்படுகிறது.
விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது. சொந்த ஊருக்கு செல்ல விரும்பும் வெளிமாநில தொழிலாளர்கள் இந்த இணையதளப்பக்கத்தில் தகவல்களை பதிவிட்டால் அவர்கள் சொந்த ஊருக்கு செல்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ஊரடங்கு காரணமாக சிக்கியுள்ள வெளிமாநில தொழிலாளர்களை சொந்த மாநிலங்களுக்கு அனுப்பலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் அண்மையில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.