தமிழ்நாடு

கல்வி குறித்து அரசு தீர ஆலோசித்து உறுதி செய்ய வேண்டும் - கமல்ஹாசன்

webteam

வழக்கம் போல் அறிவிப்பு வெளியிட்டு திரும்பப் பெறாமல், கல்வி குறித்து அரசு தீர ஆலோசித்து உறுதிசெய்ய வேண்டுமென மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள கமல்ஹாசன், "கல்வி, சராசரி குடும்பத்தின் எதிர்கால கனவு. எதிர்காலம் சிறக்க நம்பியிருக்கும் ஏணி. அரசு இதில் நேற்று அறிவித்து, இன்று அதை மாற்றி, நாளை திரும்பப்பெறும், தன் வழக்கத்தை விடுத்து தீர ஆலோசித்து, தரமான கல்வி அனைத்து குழந்தைகளுக்கும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படும் என அறிவிப்பு வெளியாகியிருந்தது. ஆனால் அரசு பள்ளியில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் சாத்தியமாகாது என எதிர்ப்புகள் கிளம்பின. இதற்கு விளக்கம் அளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், ஆன்லைன் வகுப்புகள் என்பது தொலைக்காட்சி மூலம் நடத்தப்படும் என கூறினார்.

அந்தத் திட்டத்தை அமல்படுத்திய பிறகு அதில் இருக்கும் குறைகளை சுட்டிக் காட்டலாம் என்றும் திட்டத்தை செயல்படுத்தும் முன்பே குறை கூறுவது சரியல்ல என்றும் அமைச்சர் தெரிவித்திருந்தார்.