தமிழ்நாடு

தமிழக அரசு பொங்கல் போனஸ் அறிவிப்பு

தமிழக அரசு பொங்கல் போனஸ் அறிவிப்பு

Rasus

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 3,000 ரூபாயும், சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள், ஒப்பந்த ஊழியர்களுக்கு 1000 ரூபாயும் போனசாக வழங்க ஆணையிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நிதித்துறை செயலர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2016-2017 ஆம் ஆண்டிற்கு 'சி' மற்றும் 'டி' தொகுதியைச் சார்ந்த அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 3,000 ரூபாய் என்ற உச்ச வரம்பிற்குட்பட்டு 30 நாட்கள் ஊதியத்திற்கு இணையாக மிகை ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு கால முறை ஊதியம் பெறும் சத்துணவுத் திட்டப் பணியாளர்கள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டத்தில் பணியாற்றும் அங்கன்வாடி பணியாளர்கள், கிராம உதவியாளர்கள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் சிறப்பு கால முறை ஊதிய விகிதத்தில் பணிபுரிந்து வரும் பஞ்சாயத்து உதவியாளர்கள், ஒப்பந்தப் பணியாளர்கள், தினக்கூலி அடிப்படையில் பணியாற்றுபவர்கள் உள்ளிட்டோருக்கு 1,000 ரூபாய் சிறப்பு மிகை ஊதியம் வழங்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

உள்ளாட்சி அமைப்புகள், அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் அலுவலர்கள், ஆசிரியர்கள், பல்கலைக் கழக மானியக் குழு, அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு, இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் ஆகியவற்றின் கீழ் சம்பள விகிதம் பெறுபவர்கள், அனைத்திந்தியப் பணி விதிமுறைகளின் கீழ் சம்பளம் பெறுபவர்கள் ஆகியோருக்கும் இது பொருந்தும் என்றும் தமிழக அரசு கூறியுள்ளது.