தமிழ்நாடு

கொத்தடிமையை முடிவுக்கு கொண்டுவர அரசு புதிய வழிமுறை

கொத்தடிமையை முடிவுக்கு கொண்டுவர அரசு புதிய வழிமுறை

webteam

தமிழகத்தில் கொத்தடிமை முறையை முடிவுக்கு கொண்டுவர பல்வேறு வழிமுறைகளை அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கொத்தடிமைகளாக பணிபுரிபவர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், கொத்தடிமை முறையை முடிவுக்குக் கொண்டுவர நிலையான செயல்பாட்டு வழிமுறைக்கு அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது. இதன்படி கொத்தடிமைகள் குறித்த தகவல் கிடைத்த உடன் அவர்களை மீட்பதற்காக பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகளை கொண்டு குழு அமைக்க வேண்டும், அதில் குறைந்தபட்சம் இரண்டு பெண் அதிகாரிகளாவது இருக்க வேண்டும், சமூக செயற்பாட்டாளர்கள் அல்லது தன்னார்வ அமைப்பை சேர்ந்தவர்களும் இடம்பெறுவது கட்டாயம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மீட்கப்பட்ட 24 மணி நேரத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்ப‌ட வேண்டும், உடனடி நிவாரணமாக மீட்கப்பட்ட தொழிலாளர்களுக்கு 20 ஆயிரம் ரூபாயை வழங்க வேண்டும், ஒருவேளை இவர்களை கொத்தடிமைகளாக வைத்திருந்தவர்கள் தண்டனைக்கு ஆளாக்‌கப்பட்‌டால் அதற்கென வழங்கப்படும் நிவாரணத் தொகை உடனடியாக பாதிக்கப்பட்டவர்களை சென்றடைய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் மீட்கப்பட்டவர்களுக்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை உள்ளிட்டவைகளும் அரசின் பல்வேறு திட்டங்களும் சென்றடைவதை மாவட்ட ஆட்சியர் உறுதி செய்ய வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது. கொத்தடிமைகளை வைத்திருப்பவர்கள் தண்டனை பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.