ஐஏஎஸ் நேர்முக தேர்வில் நாட்டிலேயே தமிழநாட்டை சேர்ந்த சித்ரா முதலிடம் பிடித்துள்ளார்.
ஒரு தோல்வியை கண்ட உடனேயே பலர் துவண்டு விடும் நிலையில், ஒரு பெண் ஐந்து தோல்விகளைக் கடந்து சாதித்துள்ளார். ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட மத்திய அரசின் குடிமை பணிகளுக்கான தேர்வு முடிவு ஏப்ரல் 5ஆம் தேதி வெளியானது. இந்தத் தேர்வில் 759 பேர் தேர்ச்சி பெற்றனர். இந்தத் தேர்வில் தமிழ்நாட்டை சேர்ந்த சித்ரா அகில இந்திய அளவில் 296ஆவது இடம்பிடித்தார். நேர்காணல் தேர்வில் அவர் மொத்தம் 275 மதிப்பெண்களில் 206 மதிப்பெண்களை எடுத்து இம்முறை இந்திய அளவில் நேர்முக தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.
விழுப்புரம் பகுதியை சேர்ந்தவர் சித்ரா. இவரது தந்தை தியாகராஜன் ஒரு ஒய்வு பெற்ற ரயில்வே ஊழியர். சித்ரா கடந்த 2012ஆம் ஆண்டு பொறியியல் முடித்தார். பட்டப்படிப்பை முடித்தவுடன் அவருக்கு பெங்களூருவில் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. எனினும் அவருக்கு ஐஏஎஸ் ஆக வேண்டும் என்ற ஆசை. இதனால் வேலை பார்த்து கொண்டே சிவில் சர்வீஸ் தேர்வு எழுத வேண்டும் எனத் தீர்மானித்தார். இதற்காக பயிற்சி வகுப்பில் சேர்ந்து முழு மூச்சில் இறங்கினார்.
இதனைத் தொடர்ந்து 2013ஆம் ஆண்டு முதல் முறையாக சிவில் சர்வீஸ் தேர்வு எழுதினார் அதில் முதல் நிலையிலே (ப்ரிலிம்ஸ்) தேர்விலேயே தோல்வியடைந்தார். அதன்பிறகும் தீவிர முயற்சியில் ஈடுபட்டார். எனினும் இரண்டாவது மற்றும் மூன்றாவது முறையிலும் முதல்நிலை தேர்விலேயே தோல்வியடைந்தார். அப்போதும் தோல்வியைக் கண்டு அஞ்சாமல் மீண்டும் முயற்சித்தார்.
நான்காவது மற்றும் ஐந்தாவது முயற்சியில் முதல்நிலை தேர்வில் வெற்றிப் பெற்று முதன்மை தேர்வு மற்றும் நேர்காணல் கழந்துகொண்டார். அந்த முயற்சியிலும் அவரால் இறுதி பட்டியலில் வர இயலவில்லை. இத்தனை தோல்வியைக் கண்டப்பின்பும் மனம் தளர்ந்துவிடாமல் முயற்சி செய்தார்.
சிவில் சர்வீஸ் தேர்வை பொதுப்பிரிவு பட்டியலில் வருபவர்கள் ஆறு முறை மட்டுமே எழுத முடியும். இதனால் ஆறாவது முயற்சியில் வெற்றிப் பெற்றே ஆக வேண்டும் என்னும் கட்டாயத்திற்கு இவர் தள்ளப்பட்டார். அதற்காக கடினமாக உழைத்தார். இறுதியில் இந்தாண்டு தேர்வில் வெற்றிப் பெற்றுள்ளார். ஐந்து தோல்விகளுக்குப் பிறகு வெற்றியை ரூசித்த இவர், விடாமுயற்சி எப்போதும் விஸ்வரூப வெற்றியை தரும் என்பதற்கு ஒரு சான்றாக சாதித்துக் காட்டியுள்ளார்.