தமிழ்நாடு

"தமிழகத்தில் உள்ளவர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பா?; அது COMPLICATED SUBJECT” - நிதியமைச்சர்

"தமிழகத்தில் உள்ளவர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பா?; அது COMPLICATED SUBJECT” - நிதியமைச்சர்

webteam

தமிழ்நாட்டை நிதி பற்றாக்குறை இல்லாத மாநிலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். தமிழில் பயிற்சி பெற்றவர்கள், தமிழகத்தில் உள்ளவர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையெல்லாம் COMPLICATED SUBJECT என தமிழ்நாடு நிதியமைைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டியளித்துள்ளார்.

மதுரை தெப்பக்குளம் பகுதியில் தமிழ்நாடு அரசின் ஓராண்டு சாதனைகளை விளக்கும் வகையில் அரசின் ஓராண்டு அரும்பணிகள் அணிவகுப்பு புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது. இக்கண்காட்சியை வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். தொடர்ந்து புகைப்பட கண்காட்சியை அமைச்சர்கள் மற்றும் மதுரை மேயர் இந்திராணி, ஆட்சியர் அனீஷ்சேகர், ஆணையாளர் சிம்ரன் ஜித் சிங் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

தொடர்ந்து நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேட்டி அளித்து பேசுகையில், “தேர்வில் தமிழ் கட்டாயம் என்ற அரசாணைக்கு எதிராக மெடிக்கல் தேர்வுக்கு விண்ணப்பித்த நபர் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தற்காலிக ரத்து என்ற உத்தரவை பெற்றுவிட்டார். அரசாணையை ரத்துசெய்ய நீதிமன்றத்திற்கு உரிமை உள்ளது. ஆனால் சட்ட மசோதாவை அரசமைப்பு சட்டம் அங்கீகரிக்கும். எந்த நீதிபதி? யார் என்ன செய்கிறார்கள்? என்பது இந்த காலத்தில் தெரியவில்லை. சட்டத்தையே திருத்திவிட்டால் சட்டத்தில் பிரச்னை இருக்காது என்பதால் சட்ட திருத்த மசோதா கொண்டு வந்தோம்.

தமிழில் பயிற்சி பெற்றவர்கள், தமிழகத்தில் உள்ளவர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையெல்லாம் COMPLICATED SUBJECT. இந்தக் கோரிக்கைகள் அனைவருக்குமான உரிமையில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. புதிய சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து தமிழகத்தில் இனிவரும் போட்டித் தேர்வுகளில் தமிழில் 40 சதவீத மதிப்பெண் எடுக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டைவிட நடப்பு ஆண்டில் நிதி வருவாய் அதிகரித்துள்ளது. நடப்பு ஆண்டில் முதல் 6 மாதத்தில் சுமார் 4 ஆயிரம் கோடி மட்டுமே வருவாய் பற்றாக்குறை இருந்துள்ளது. தமிழ்நாட்டை நிதி பற்றாக்குறை இல்லாத மாநிலமாக மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும். செலவுகளை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளதால் வருவாய் பற்றாக்குறை குறைக்கப்பட்டுள்ளது.

திமுக ஆட்சிக்கு வரும்போது 62 ஆயிரம் கோடி நிதி பற்றாக்குறை இருந்தது. மூர்த்தி அண்ணன் துறையில் இருந்து கூடுதல் வருவாய் கிடைத்தது. தமிழக அரசின் நடவடிக்கையால் நிதி பற்றாக்குறை படிப்படியாக குறைக்கப்பட்டது. கடந்த பட்ஜெட்டில் 46 ஆயிரம் கோடியாக நிதி பற்றாக்குறை உள்ளது. எதிர்வரும் பட்ஜெட்டில் நிதி பற்றாக்குறை இன்னும் குறைக்கப்படும்” என்றார். ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ குறித்த கேள்விக்கு கை எடுத்து கும்பிட்டபடி நகர்ந்து சென்றார்.