தமிழ்நாடு

பொன்.மாணிக்கவேலுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்த தமிழக அரசு!

பொன்.மாணிக்கவேலுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்த தமிழக அரசு!

webteam

சிலைக்கடத்தல் தடுப்பு  பிரிவு முன்னாள் சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேலுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது

சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரியாக இருந்த பொன் மாணிக்கவேலின் பதவிக்காலம் நிறைவடைந்ததை அடுத்து ஆவணங்களை ஒப்படைக்குமாறு அவருக்கு தமிழக அரசு கடிதம் எழுதியிருந்தது. ஆனால், உச்சநீதிமன்றம் தம்மை சிறப்பு அதிகாரியாக நியமித்ததால் நீதிமன்றம் உத்தரவுப் பிறப்பிக்காமல் ஆவணங்களை தர முடியாது என்று பொன் மாணிக்கவேல் பதில் கடிதம் எழுதியிருந்தார். 

இந்நிலையில், ஆவணங்களை ஒப்படைக்குமாறு அவருக்கு கடந்த திங்கள்கிழமை உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, ஆவணங்களை ஒப்படைக்குமாறு, சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஏ.டி.ஜி.பி. அபய்குமார் சிங் கடிதம் எழுதியிருந்தார். இதற்கு பதில் அளித்துள்ள பொன் மாணிக்கவேல், உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு இணங்க தன்னால் விசாரிக்கப்பட்ட வழக்குகளின் ஆவணங்களை ஒருங்கிணைக்கும் பணிகள் முடிந்தவுடன் சி.டி. வடிவில் விரைவில் வழங்குவதாக தெரிவித்துள்ளார். மேலும், நீதிமன்ற உத்தரவுகளை மதிப்பது தனது கடமை என்றும் கடிதத்தில் பொன் மாணிக்கவேல் குறிப்பிட்டிருந்தார். 

இந்நிலையில் நீதிமன்றத்தின் உத்தரவின்படி பொன். மாணிக்கவேல் ஆவணங்களை சமர்ப்பிக்கவில்லை என்று, பொன் மாணிக்கவேலுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது