தமிழ்நாடு

பெண் குழந்தையை விற்று ஆண் குழந்தைக்கு தங்கச் செயின் வாங்கிய தந்தை

webteam

தனது பெண் குழந்தையை விற்று, அந்த பணத்தில் ஆண் குழந்தைக்கு தங்கச் செயினை தந்தை வாங்கிய சம்பவம் நெல்லையில் நிகழ்ந்துள்ளது.

நெல்லை மாவட்டம் அருகம்பட்டி கிராமத்தில் வசித்து வரும் தம்பதி ஏசு இருதயராஜ் (38) மற்றும் புஷ்பலதா. இவர்களுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் இருக்கிறார்கள். இந்நிலையில் கடந்த நவம்பர் 8ஆம் தேதி இவர்களுக்கு ஒரு ஆண், ஒரு பெண் என இரட்டைக் குழந்தை பிறந்துள்ளது. ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் நிலையில் மேலும் ஒரு பெண் குழந்தை பிறந்தது ஏசு இருதயராஜ்க்கு விருப்பமில்லை. இதனால் அந்தக் குழந்தையை விற்க முடிவு செய்துள்ளார். இதற்காக செல்வம், நெல்லையப்பர் மற்றும் கண்ணன் ஆகிய மூன்று இடைத்தரகர்களை அணுகியுள்ளார்.

அவர்களில் ஒருவரின் உதவியுடன் நெல்லையைச் சேர்ந்த மற்றொருவருக்கு குழந்தையை ரூ.1.80 லட்சத்திற்கு விற்றுள்ளனர். ஏசு இருதயராஜ்க்கு ரூ.1 லட்சமும், இடைத்தரகருக்கு ரூ.80 ஆயிரம் பங்கு பிரிக்கப்பட்டிருக்கிறது. தனக்கு கிடைத்த பணத்தை எடுத்துக்கொண்டு சென்ற இருதயராஜ், புதிதாக பிறந்த ஆண் குழந்தைக்கு தங்கச் சங்கிலி ஒன்றை வாங்கியுள்ளார். அத்துடன் தனக்கு ஒரு புதிய செல்போன் வாங்கியுள்ளார். மேலும் அடமானத்தில் இருந்த பைக் மற்றும் சைக்கிளை மீட்டுள்ளார். இந்த உண்மைகள் எதுவும் தனது மனைவி புஷ்பலதாவிற்கு தெரியாமல் அவர் செய்திருக்கிறார்.

இந்நிலையில், ஆண் குழந்தையை தூக்கிக்கொண்டு இருதயராஜ்ஜும், புஷ்பலதாவும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, வழக்கமான பரிசோதனைக்காக சென்றுள்ளனர். அங்கு பணியில் இருந்த செவிலியர்கள் பெண் குழந்தை எங்கே ? கேள்வி எழுப்பியுள்ளனர். அந்த குழந்தைக்கு தேவையான பரிசோதனைகளை செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளனர். அந்த குழந்தையை தனது மனைவியே கவனித்துக்கொள்வார் என இருதயராஜ் பதிலளித்துள்ளார்.

இதைக்கேட்ட புஷ்பலதா, “பெண் குழந்தை எங்கே இருக்கிறது என தனக்கு தெரியாது” எனக் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி இருதயராஜுடன் அந்த இடத்திலேயே சண்டையிட்டுள்ளார். இதைக்கண்ட செவிலியர் குழந்தை பாதுகாப்புத்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார்.

அவர்கள் வந்து விசாரணையில் நடத்தியதில் குழந்தை விற்கப்பட்ட சம்பவம் தெரியவந்துள்ளது. இதையடுத்து இருதயராஜ், இடைத்தரகர், குழந்தையை வாங்கியவர் என அனைவரும் கைது செய்யப்பட்டனர். குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டு தற்காலிகமாக குழந்தைகள் பாதுகாப்பு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.