தமிழ்நாடு

112 அடியான முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம்: விவசாயிகள் கவலை

112 அடியான முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம்: விவசாயிகள் கவலை

webteam

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 112 அடியாக குறைந்துள்ளதால் தமிழக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

பருவ மழை முற்றிலும் ஓய்ந்ததால் தென்தமிழகத்தின் நீர் ஆதாரமான முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 112 அடியாக குறைந்துள்ளது. இதனால் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தமிழக பாசனத்திற்காக ஜூன் முதல் வாரத்தில் தண்ணீர் திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தமிழகத்திற்கு 104 அடிக்கும் மேல் உள்ள தண்ணீரை மட்டுமே பயன்படுத்த முடியும். இதனால் தற்போது உள்ள நீரை குடிநீருக்கே பயன்படுத்த முடியும் என்றும், பாசனத்துக்கான நீர் திறப்பு குறைக்கப்படும் என்றும் பொதுப்பணித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த தண்ணீர் தேனி, மதுரை உள்ளிட்ட 5 மாவட்டங்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவே போதுமானதாக இருக்கும் என்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஜூன் முதல் வாரத்தில் தமிழக பாசனத்திற்காக தண்ணீர் திறக்க முடியாத சூழல் இருப்பதால் தமிழக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதனால் கம்பம் பள்ளத்தாக்கில் உள்ள 14 ‌ஆயிரத்து 707 ஏக்கர் பாசன பகுதிகள் முல்லைப்பெரியாறு அணையை நம்பி உள்ள நிலையில், முதல் போக சாகுபடி தள்ளிப்போகும் ‌நிலை உருவாகி உள்ளது.