தமிழகத்தில் வறட்சி பாதிப்பு குறித்து ஆய்வு நடத்த மத்தியக் குழுவினர் தஞ்சாவூர் சென்றுள்ளனர். தஞ்சை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, அங்கு நிலவும் வறட்சி பாதிப்பு குறித்து அவர்களிடம் விளக்கமளித்தார்.
தமிழகத்தில் பருவமழை பொய்த்ததாலும் காவிரியில் போதிய அளவு நீர் திறக்கப்படாத காரணத்தினாலும் பெரும் வறட்சி நிலவுகிறது. வறட்சி பாதித்த பகுதிகளை ஆய்வு செய்ய மத்தியக் குழுவினர் தமிழகம் வந்துள்ளனர். தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக்கழக நிர்வாக இயக்குனர் வசுதா மிஸ்ரா, மத்திய செலவினத்துறை மற்றும் நிதி அமைச்சகம் சார்பாக தீனாநாத், மத்திய மின்சாரத்துறை சார்பாக அமித் குமார் உள்ளிட்டோர் கோவில்பட்டு, புதுப்பட்டினம், மேலஉலூர், சொக்கணாவூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். தஞ்சை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை வறட்சி பாதிப்பு குறித்து அவர்களிடம் விளக்கமளித்தார். மத்திய குழுவினர் விவசாயிகளிடம் பாதிப்பு குறித்து கேட்டறிந்தனர்.
இதில் ஏக்கருக்கு 25 ஆயிரம், தொழிளார்களுக்கு மாதம் 10 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை, உயிரிழந்த விவசாயிகளுக்கு 10 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்து நடப்பு ஆண்டில் தண்ணீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டனர். தஞ்சையை அடுத்து நாகை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மத்தியக் குழு பார்வையிட உள்ளது.