Driver argument pt desk
தமிழ்நாடு

"எதுக்கு சார் Fine போடுறீங்க..காசு புடுங்குறதுதான் உங்க வேலையா? " ஓட்டுநர் வாக்குவாதம்; வீடியோ வைரல்

வாகனத்தை வழிமறித்து அபராதம் விதித்த போக்குவரத்து காவலருடன், ஓட்டுநர் ஒருவர் வாக்குவாதம் செய்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

webteam

சென்னை வியாசர்பாடியில் இருந்து கடம்பத்தூரில் உள்ள தனியார் பள்ளிக்கு, பாடப்புத்தகங்களை எடுத்துக் கொண்டு செந்தமிழன் என்பவர் சென்று கொண்டிருந்தார். அப்போது, சாலையில் செந்தமிழனை வழிமறித்த போக்குவரத்துக் காவலர் ஒருவர், போக்குவரத்துக்கு இடையூறு செய்வதாக கூறி அபராதம் விதிக்க முற்பட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த செந்தமிழன், இதில் என்ன இடையூறு இருக்கிறது. obstruction என்கிறீர்களே. அப்படி என்றால் அதற்கு விளக்கம் சொல்லுங்கள் பார்க்கலாம். என்று ஆங்கிலத்தில் கேள்விக்கனைகளை தொடுக்கத் தொடங்கினார் செந்தமிழன்.

Traffic police

இதற்கிடையே, போக்குவரத்துக் காவலர் லைசன்ஸை கேட்க, காவலரின் ஐடி கார்டை கேட்கிறார் செந்தமிழன். இதனால் ஆத்திரமடைந்த காவலர், அதையெல்லாம் கேட்க அதிகாரம் இல்லை என்று பதில் சொல்கிறார். எந்த காரணமும் இல்லாமல் எதற்கு ஐநூறு ரூபாய் கேட்கிறீர்கள். பணம் என்ன மரத்திலா காய்க்கிறது என்று வாக்குவாதம் செய்தார் செந்தமிழன்.

இதற்கிடையே, அங்கு வந்த மற்றொரு காவலர், எந்த பிரச்னையும் இல்லையே அனுப்பிவிட வேண்டியதுதானே என்று கேட்க, அபராதம் விதிப்பதிலேயே இருக்கிறார் அந்த காவலர். வாகனத்தில் அனுமதிக்கப்பட்ட அளவிலேயே பாடப்புத்தகங்கள் இருந்த நிலையில், தனது ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட வாகன ஆவணங்களையும் காட்டும் செந்தமிழன், நான் புகார் கொடுப்பேன் என்று கூறுகிறார்.

இதுதொடர்பான வீடியோ தற்போது வெளியாகியுள்ள நிலையில், 500 ரூபாய் அபராதத்திற்கான குறுஞ்செய்தி தனக்கு வந்துள்ளதாகவும், அதில் ஓட்டுனர் உரிமம் இல்லாததால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.