சிலை கடத்தல் வழக்குகளில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் மீறப்பட்டால் அதற்கு டிஜிபி தான் பொறுப்பு என்று உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சிலை கடத்தல் வழக்குகளை சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் நீதிமன்ற உத்தரவுப்படி விசாரித்து வருகின்றார். இதுதொடர்பாக உயர்நீதிமன்றம் பிறப்பித்த 10 உத்தரவுகளில் 6 உத்தரவுகளை அரசு நிறைவேற்றவில்லை என பொன்.மாணிக்கவேல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிமன்றம், சிலை கடத்தல் வழக்கில் பிறப்பித்த உத்தரவுகளை மீறினால் அதற்கு காவல்துறை டிஜிபி தான் பொறுப்பு என்று கூறியது.
உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை மீறக்கூடாது என நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு கூறினர். அத்துடன் இந்த மண்ணின் பொக்கிஷங்களை பாதுகாக்கவே நீதிமன்றம் செயல்படுதாகவும், அரசு அதிகாரிகளுக்கோ, அரசுக்கு எதிராகவோ அல்லது ஆதரவாகவோ நீதிமன்றம் செயல்படவில்லை என்று குறிப்பிட்டனர். இதையடுத்து வழக்கை நவம்பர் 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.