செல்வப்பெருந்தகை | ஆம்ஸ்ட்ராங் படுகொலை  புதிய தலைமுறை
தமிழ்நாடு

ஆம்ஸ்ட்ராங் படுகொலை | “கோழைகள் பின்புறமாக வந்து தாக்கி இருக்கிறார்கள்”- காங்கிரஸ் செல்வப்பெருந்தகை!

ஜெனிட்டா ரோஸ்லின்

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், நேற்று இரவு தனது பழைய வீட்டின் கட்டுமான பணிகள் நடைபெறும் இடத்தின் அருகே நின்று, தனது நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்துள்ளார். அப்போது, அடையாளம் தெரியாத 8 பேர் சரமாரியாக அவரை வெட்டிக் கொலை செய்தனர். பின் நள்ளிரவிலேயே 8 பேர் காவல்நிலையத்தில் சரணடைந்தனர்.

இதனால், ஆம்ஸ்ட்ராங்கின் இறப்பிற்கு நீதி தேடும் போராட்டக்களமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகள் மாறியிருக்கிறது. அரசியல் கட்சிகள், அதன் தலைவர்கள் என பல்வேறு தரப்பு மக்கள் தங்களின் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

ஆம்ஸ்ட்ராங் - செல்வப்பெருந்தகை

இந்நிலையில், காங்கிரஸ் மாநிலத்தலைவர் செல்வப்பெருந்தகை இன்று ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து அவர் செய்தியாளரை சந்தித்து பேசியுள்ளார். அவர் பேசுகையில், “விஜயகாந்த் அவர்களை எப்படி அவர்களின் தலைமை அலுவலகத்தில் அடக்கம் செய்தார்களோ அதேபோல, தலைவர் ஆம்ஸ்ட்ராங்கையும் அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கும், முதலமைச்சருக்கும் வேண்டுகோள் வைக்கிறோம்.

உண்மையான குற்றவாளிகள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு எவ்வளவு அரசியல் பின்புலம் இருந்தாலும்... சட்டத்தின் முன் அவர்களை நிறுத்த வேண்டும். யாரும் தப்பிக்க முடியாது என்று எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது.

Selvaperunthagai

ஆம்ஸ்ட்ராங்கிடம் யாரும் நெருங்க முடியாது. ஆயிரம் பேர் வந்தாலும் சமாளிக்க கூடியவர் அவர். நேரடியாக வந்தால் யாராலும் அவரை சமாளிக்க முடியாது என கோழைகள் பின்புறம் இருந்து தாக்கி இருக்கிறார்கள். இந்த கோழைகளின் பின்புறம் யார் இருக்கிறார்கள் என்று அடையாளப்படுத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.