முதல்வர் ஸ்டாலின் PT Desk
தமிழ்நாடு

“மொழியின் பெயரை தனது பெயராக வைத்து கொள்வதில் முன்னோடி இனம் நாம்” : FeTNA மாநாட்டில் முதல்வர் பேச்சு

"இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாறு, இனி தமிழ் நிலத்தில் இருந்துதான் எழுதப்பட வேண்டும் என்ற முழக்கத்தை முன்னெடுத்துச் செயல்பட்டு வருகிறோம்''

PT WEB

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (02.07.2023) வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை மாநாட்டில் (FeTNA) காணொளி வாயிலாக கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், “வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப்பேரவையும் – சாக்ரமெண்டோ தமிழ்மன்றமும் இணைந்து நடத்தும் தமிழ் விழாவில் காணொளி மூலமாக கலந்துகொண்டு உங்களைச் சந்திப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். தாய்த் தமிழ்நாட்டின் மீது பற்றும் திராவிடமாடல் நல்லாட்சியின் மீது நம்பிக்கையும் கொண்டு எனக்கு இந்த விழாவில் பங்கேற்று உரையாற்ற வாய்ப்பளித்த அனைவருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

09-01-2023 அன்று நடந்த "உலகத் தமிழ் புத்தொழில் முதலீட்டாளர்கள்" மாநாட்டினை நீங்கள் நடத்தியபோது அதிலும் காணொளி மூலமாக கலந்து கொண்டு நான் உரையாற்றினேன். பெட்னா (FeTNA) அமைப்புடன் இணைந்து தமிழ்நாடு அரசின் MSME துறையின் கீழ் இயங்கக்கூடிய டான்சிம் (TANSIM) நிறுவனம் அந்த மாநாட்டை நடத்தியது. உலகெங்கும் வாழும் முதலீடு செய்யும் சக்தி படைத்த தமிழர்கள் நம் தமிழ்நாட்டில் செயல்படும் புத்தொழில் நிறுவனங்களில் முதலீடு செய்யும் வாய்ப்பு மட்டுமல்லாது அவர்களுக்கு வழிகாட்டியாக செயல்பட வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்பட்டது.

இந்த முன்னெடுப்பின் முதல்கட்டமாக “அமெரிக்கத் தமிழ் நிதியம்”என்ற அமெரிக்கவாழ் தமிழர்களால் தொடங்கப்பட்ட அமைப்பு மூலமாக 10 கோடி ரூபாய் அளவுக்கு தமிழ்நாட்டின் தொடக்க நிலை புத்தொழில் நிறுவனங்களுக்கான முதலீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டின் புதுயுக தொழில் முனைவுகளில் உலகெங்கும் வாழும் தமிழர்கள் பங்குபெற அது ஊக்கமளிப்பதாக அமைந்தது.

அந்தவகையில் ஃபெட்னா அமைப்பானது கூடிக் கலையும் அமைப்பாக இல்லாமல், கூடி உழைக்கும் அமைப்பாக செயல்பட்டு வருவதை அனைவரும் அறிவோம். இத்தகைய ஃபெட்னா அமைப்பும், சாக்ரமெண்டோ தமிழ்மன்றமும் இணைந்து நடத்தும் தமிழ் விழாவுக்கு வருகை தந்துள்ள உங்கள்அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். அமெரிக்கவாழ் தமிழர்கள் மட்டுமல்ல – பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்களும் அங்கு கூடியிருக்கிறீர்கள். ஏன், தமிழ்நாட்டில் இருந்தும் ஏராளமானவர்கள் அங்கு வந்திருப்பதாக நான் அறிகிறேன். அந்தவகையில், உலகத் தமிழ்ச் சங்கமமாக இந்த மாநாடு அமைந்திருக்கிறது. இது தமிழ் விழா! தமிழ் எப்போதும் வாழவே வைக்கும்! வாழ வைத்துக்கொண்டு இருக்கிறது.

FeTNA

தமிழ் என்பது நமக்கு மொழியாக மட்டுமல்ல; அமுதமாக, உயிராக நம்மை வாழ்விக்கும் மண்ணாக, இனிமை தரும் மணமாக, இளமைக்கு மருந்தாக, போராட்டக் களத்துக்கு வாளாக இருக்கிறது. அதனால்தான் தமிழ் என்றால் நாம் உணர்ச்சி வசப்படுகிறோம். இனமான உணர்ச்சி அடைகிறோம். மொழியின் பெயரை தனது பெயராக வைத்துக் கொள்வதில் முன்னோடி இனம் நாம்தான். தமிழ்ச்செல்வன், தமிழரசன், தமிழ்ச்செல்வி என்று பெயர்வைத்துக்கொண்டவர்கள் 18 வயதுக்குமேல், சுமார் 3 லட்சத்து 75 ஆயிரம் பேர் இருக்கிறார்கள் என்று ஐ.ஏ.எஸ். அதிகாரி பாலகிருஷ்ணன் அவர்கள் கணக்கிட்டுச் சொல்லி இருக்கிறார்கள். குழந்தைகளின் பெயரையும் சேர்த்தால் இது இன்னும் அதிகமாகும். மொழிக்காக தம் தேக்கு மர தேகத்தை தீக்கிரையாகக் கொடுத்த இனத்தைச் சேர்ந்தவர்கள் நாம்.

கடல் கடந்து வந்த பிறகும், தாய்மொழிக்காக விழா எடுத்துக்கொண்டிருக்கிறீர்கள் என்றால், மொழி என்பது நம்மைப் பொறுத்தவரையில் எழுத்தாக இல்லை, ரத்தமாக இருக்கிறது. அந்த உணர்வோடுதான் நாம் கூடி இருக்கிறோம். 'தொன்மை தமிழரின் பெருமை' என்ற தலைப்பில் இந்த மாநாட்டை ஏற்பாடு செய்திருக்கிறீர்கள். உலகம் தோன்றியதைக் கணிக்க முடியாதது மாதிரி, தமிழின் தோற்றத்தையும், தமிழினத்தின் தோற்றத்தையும், கணிக்கமுடியாத அளவுக்கு தொன்மையான வரலாறு நமக்கு உண்டு.‌ இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டுக்கு 1968 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் இருந்து அறிஞர்கள் வருகை தந்திருந்தார்கள். அவர்களிடம் அன்றைய முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா அவர்கள் பேசினார்.

அறிஞர் அண்ணா

"இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாறு, இனி தமிழ் நிலத்தில் இருந்துதான் எழுதப்பட வேண்டும்" என்ற முழக்கத்தை முன்னெடுத்துச் செயல்பட்டு வருகிறோம். கழக ஆட்சி அமைந்ததும், பல்வேறு ஆய்வுகளை நாம் மேற்கொண்டு வருகிறோம். தமிழ்நாட்டில் பொது ஊழிக்கு முன் 6-ஆம் நூற்றாண்டிலேயே நகரமயமாக்கம் ஏற்பட்டிருந்தது என்பதும், படிப்பறிவும், எழுத்தறிவும் பெற்ற மேம்பட்ட சமூகமாக நாம் விளங்கினோம் என்பதையும் கீழடி அகழாய்வு நிலை நிறுத்தியுள்ளது. அதேபோல், சிவகளையில் முதுமக்கள் தாழியில் கண்டெடுக்கப்பட்ட உமிநீங்கிய நெல்மணிகளின் காலம் பொது ஊழிக்கு முன் 1155 என கண்டறியப்பட்டுள்ளது. ‘தண்பொருநை’ என்று அழைக்கப்பட்ட தாமிரபரணி ஆற்றங்கரை நாகரிகம் 3200 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பது அறிவியல் பூர்வ ஆய்வுகளின் அடிப்படையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்திய அளவில் செய்யப்பட்ட ஆய்வுகளின்படி, காலத்தால் முந்தியது மயிலாடும்பாறைதான். இப்படி ஒவ்வொரு ஆய்வாக வர, வர தமிழரின் தொன்மையானது வெளிச்சம் பெற்றுக்கொண்டே இருக்கப் போகிறது” என்று பல விஷயங்களை அவர் பகிர்ந்து கொண்டார்.