தமிழ்நாடு

“விழித்திரு.. விலகியிரு.. வீட்டிலிரு” : முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்

“விழித்திரு.. விலகியிரு.. வீட்டிலிரு” : முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்

jagadeesh

கொரோனாவுக்கு எதிராக விழித்திரு.. விலகியிரு.. வீட்டிலிரு.. என முதல்வர் பழனிசாமி தமிழக மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து தமிழக மக்களுக்கு முதல்வர் பழனிசாமி இன்று உரையாற்றினார். அதில், “தமிழக முதலமைச்சராக இல்லாமல் குடும்பத்தில் ஒருவராக பேசுகிறேன். அரிசி, பால், இறைச்சி மற்றும் மருந்துப் பொருட்கள் தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கும் என்பதால் மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம். மருத்துவமனைகளில் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க உத்தரவிட்டுள்ளேன். அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே சென்றால் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும். 21 நாள் ஊரடங்கு என்பது விடுமுறை அல்ல: உங்கள் குடும்பத்தை பாதுகாக்கும் அரசின் உத்தரவு.

தொடர்ந்து பேசிய முதல்வர் பழனிசாமி " மக்கள் சுய மருத்துவம் செய்துக்கொள்ள வேண்டாம். பிரதமர் அறிவித்த 21 நாள்கள் ஊரடங்கை முழுமையாக கடைபிடிப்போம். சாதி, மத, இன வேறுபாடுகளை கடந்து கொரோனாவை விரட்ட உறுதியேற்போம். கொரோனாவின் தீவிரத்தை உணர்ந்து யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். கொரோனாவுக்கு எதிராக போராடி தமிழகத்தையும், தமிழக மக்களையும் காக்க உறுதியேற்போம். பொறுப்பான குடிமக்களாக இருந்து நம்மையும், சமுதாயத்தையும் பாதுகாப்போம்” என்று கூறினார்.

முன்னதாக, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு கூடுதல் நிதியுதவியாக ரூ4ஆயிரம் கோடியை ஒதுக்கக் கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.