vijay - stalin facebook
தமிழ்நாடு

“புதிது புதிதாக கட்சி தொடங்குபவர்கள் எல்லாம்..” - விஜய் பேச்சுக்கு மௌனம் கலைத்த முதலமைச்சர்?

தவெக தலைவர் விஜய் தன் முதல் மாநாட்டில் பேசியதை, மறைமுகமாக விமர்சிக்கும் விதமாக பேசியுள்ளார் தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்.

ஜெனிட்டா ரோஸ்லின்

செய்தியாளர்: ராஜ்குமார்

இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் உள்ள அனிதா பயிற்சியகத்தில் பல்வேறு தொழில் பயிற்சிகள் பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். Tally முடித்த 62 பெண்கள் மற்றும் 45 ஆண்களுக்கு சான்றிதழ் மற்றும் லேப்டாப், தையல் பயிற்சி பெற்ற 350 பெண்களுக்கு தையல் மிஷின், 2493 பேருக்கு இலவச மூக்கு கண்ணாடி, புத்தாடைகள் ஆகியவை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

இதில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், தவெக தலைவர் விஜய் தன் முதல் மாநாட்டில் பேசியதை மறைமுகமாக விமர்சிக்கும் விதமாக பேசியுள்ளார்.

அனிதா அகாடாமி

அப்போது பேசிய அவர், “கொளத்தூர் தொகுதியை பொறுத்தவரை நன்றி என்று கூறினாலே உங்களுக்கு கோவம் வந்துவிடும். ஆனாலும் இங்கு நன்றி உரை மட்டுமல்ல, வரவேற்புரை ஆற்றுவதற்கும் எனக்கு தகுதி உண்டு. எவ்வளவு நெருக்கடியான வேலைகள் இருந்தாலும், கொளத்தூருக்கு வந்தால் தனி மகிழ்ச்சிதான். அதிலும் அனிதா அகாடமிக்கு வந்தால் தனி உற்சாகம் எனக்குள் வந்துவிடும்.

நீட் தேர்வு அனிதாவின் கனவை சிதைத்து விட்டது. உயிரை பறித்துவிட்டது. எளியோரின் மருத்துவ கனவை சிதைக்கும் நீட் தேர்வுக்கு எதிரான தமிழக அரசின் குரல் தொடரும். நீட் தேர்வுக்கு எதிரான தமிழக அரசின் குரலுக்கு ஒன்றிய அரசு ஒருநாள் அடிபணியும். சாதாரண பின்புலத்தில் இருந்து வருவோர் சாதிக்கும் வாய்ப்பை இந்த அனிதா அகாடமி உருவாக்கியுள்ளது.

“இந்த ஆட்சி எதுவும் செய்யவில்லை என குறை சொல்லி வருகிறார்கள்!”

அனிதா அகாடமியில் பயிற்சிக்கு வருவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டு இளைஞர்களை எல்லா நிலைகளிலும் தகுதியுடையவர்களாக மாற்றுவதுதான் திராவிட மாடல் ஆட்சியின் லட்சியம் என்பதை நீங்கள் மறந்துவிடக்கூடாது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஆனால், இந்த ஆட்சி எதுவும் செய்யவில்லை என்று இன்று சிலர் குறை சொல்லிவருகிறார்கள். அவர்கள் யாராக இருந்தாலும் சரி, இதையெல்லாம் அவர்கள் பார்க்க வேண்டும். மூன்றரை ஆண்டுகளாக பல திட்டங்கள நிறைவேற்றி வருகிறோம். தேர்தலின்போது கூறிய உறுதி மொழிகளை தொடர்ந்து நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். மீதமுள்ள ஒன்றிரண்டு உறுதி மொழிகளை வரும் காலத்தில் உறுதியாக நிறைவேற்றப் போகிறோம். இதில் எந்த மாற்றமும் கிடையாது.

“திட்டங்களை அறிவித்து சென்று விடலாம்..”

அதே போல ஒரு பக்கம் இளைஞர்களுக்குரிய வேலை வாய்ப்பை ஏற்படுத்துகின்றோம். மாணவர்களுக்கு ஊக்கத்தொகை கொடுத்துக்கொண்டு இருக்கிறோம். தொழிலில் தமிழ்நாடு முதல் இடத்தை பெற்றிருக்கிறது. தொலைநோக்கு அரசாக நம்முடைய திராவிட மாடல் அரசு செயல்பட்டு கொண்டிருக்கிறது.

Anitha Achievers Academy-ஐ போல இந்த அரசும் Achieve பண்ணிக்கொண்டு இருக்கிறது. ஒன்றிய அரசு வெளியிடும் அறிக்கைகளில் முதன்மையான இடத்தைப்பெறும் மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது.

காரணம் என்னவென்றால், திட்டங்களை யார் வேண்டுமானாலும் அறிவித்து சென்று விடலாம். அது சாதாரணம். நிதியை கூட ஒதுக்கிவிடாலாம். ஆனால் அதை கண்காணித்து, நிறைவேற்றும் அரசாகவும் இந்த அரசாங்கம் இருந்து வருகிறது. களத்தில் சென்று பார்க்கக்கூடிய முதலமைச்சராக நான் இருந்து கொண்டிருக்கிறேன்.

“புதிது புதிதாக கட்சியை தொடங்குபவர்கள் எல்லாம்..”

சென்னையில் இரண்டு நாட்கள் தொடர்ந்து பெய்த மழைக் காரணமாக தண்ணீர் தேங்கியது. அந்த நேரத்தில் தி.மு.க. அரசு சிறப்பாக செயல்பட்டது. அடுத்த நாள் தண்ணீர் தேங்கவில்லை என்கிற செய்தியைதான் பத்திரிகைகளில் பார்த்தோம், கேட்டோம்.

ஆனால், சில மீடியாக்கள் போன வருடம் தேங்கிய மழைநீர் படங்களை வைத்து இம்முறை மழைநீர் தேங்கியதென சொல்கிறார்கள். ஏனெனில் திமுக ஆட்சிக்கு வருவது அவர்களுக்கு பிடிக்கவில்லை.

அதனால்தான் யார் யாரோ, புதிது புதிதாக கட்சியை தொடங்குபவர்களெல்லாம் ‘திமுக அழிய வேண்டும், ஒழிய வேண்டும்’ என்று நிலையில் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

“ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் 'வாழ்க வசவாளர்கள்'...”

அவர்கள் அனைவரையும் பணிவோடு இந்த நேரத்தில் நான் சொல்வது, ‘எங்களின் இந்த மூன்றரை ஆண்டு சாதனைகளை எண்ணிப் பாருங்கள்’. ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் வாழ்க வசவாளர்கள். வசவாளர்களை பற்றி நாங்கள் கவலைப்படபோவதில்லை. எங்களுடைய நோக்கம், மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதுதான்.

தேவையில்லாமல் எல்லோருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியமோ தேவையோ எங்களுக்கு இல்லை. யாருடைய நேரத்தையும் நாங்கள் வீணடிக்க விரும்பவில்லை. மக்களுக்கு பணியாற்றவே எங்களுக்கு போதுமான நேரம் கிடைக்கவில்லை. எந்த நம்பிக்கையில் எங்களை நம்பி ஆட்சியை ஒப்படைத்தீர்களோ, அந்த நம்பிக்கையுடன் பணியாற்ற காத்திருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.