CM Stalin-Senthil Balaji File Photo
தமிழ்நாடு

தலைமை செயலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் அறையில் அமலாக்கத்துறை சோதனை - முதல்வர் கண்டனம்

சங்கீதா

அடையாறு பசுமை வழிச் சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு, பிஷப் கார்டன் பகுதியில் உள்ள அவரது சகோதரர் தங்கியிருந்த வீடு மற்றும் அலுவலகத்தில் இன்று காலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். மத்திய துணை ராணுவப்படை வீரர்கள் பாதுகாப்புடன் 5 கார்களில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் இந்த சோதனையை மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் அறையில் அமலாக்கத் துறையினர் 3 மணிநேரம் சோதனை செய்தனர். சென்னை, கரூர் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தி வரும் நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டின் முன்பு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “அண்ணாமலை விவகாரத்தை திசை திருப்ப சோதனை. செந்தில் பாலாஜி ஒரு அமைச்சர்; அவர் வெவ்வேறு பதவிகளில் இருக்கலாம்; அவர் முதலில் ஒரு மனிதர் (Human Being); அவரது உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். அண்ணாமலை விவகாரத்தை திசை திருப்ப செந்தில்பாலாஜி வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர். மத்திய அரசின் செயல் ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு அழகல்ல” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், புறவாசல் வழியாக அச்சுறுத்த முயற்சிப்பதாக, அமலாக்கத் துறை சோதனை குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். விசாரணை அமைப்புகள் உள்நோக்கத்துடன் செயல்படுவதாகவும் அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாதவர்களை, புறவாசல் வழியாக அச்சுறுத்தப் பார்க்கும் பா.ஜ.க.வின் அரசியல் செல்லுபடியாகாது. அதனை அவர்களே உணரும் காலம் நெருங்கிக் கொண்டு இருக்கிறது. தன் வசம் இருக்கும் விசாரணை அதிகார அமைப்புகள் மூலமாகத் தனக்கு எதிரான அரசியல் சக்திகளை பா.ஜ.க. பழிவாங்கும். அவர்களுக்குத் தெரிந்த ஒரே வழி இது மட்டும்தான் என்று நான் ஏற்கனவே சொல்லி இருந்தேன். இதற்கு இந்திய அளவில் எத்தனையோ எடுத்துக்காட்டுகள் சமீப காலங்களில் பல்வேறு மாநிலங்களில் நடந்துள்ளன” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.