தமிழ்நாடு

இந்தியா-இலங்கை இடையே ஒப்பந்தத்தை ஏன் ஏற்படுத்தக்கூடாது?.... முதலமைச்சர் கேள்வி

இந்தியா-இலங்கை இடையே ஒப்பந்தத்தை ஏன் ஏற்படுத்தக்கூடாது?.... முதலமைச்சர் கேள்வி

webteam

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறைகளில் உள்‌ள 85 தமிழக மீனவர்களையும், 128 படகுகளையும் மீட்க வெளியுறவுத்துறை மூலம் நடவடிக்கை எடுக்கும்படி தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் இந்தியா இலங்கை இடையே ஒரு ஒப்பந்தத்தை ஏன் ஏற்படுத்தக்கூடாது எனவும் முதலமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 32 மீனவர்களும் 5 மீன்பிடி படகுகளும் இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்டிருப்பதை கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். மீனவர்களை துன்புறுத்தமாட்டோம் என இருதரப்பு பேச்சுவார்த்தைகளின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை இலங்கை மதிக்க தவறிவிட்டது என்றும் பழனிசாமி கூறியுள்ளார். தென் கிழக்கு ஆசிய நாடுகள் உட்பட கடல் எல்லை உள்ள நாடுகள் மீன்பிடிக்க இருதரப்பு ஒப்பந்தங்களை ஏற்படுத்தி, சிக்கலின்றி மீன்பிடித்து வருவதாக பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இலங்கையின் கட்டுப்பாட்டில் தற்போது 128 படகுகள் இருப்பதாகவும் அவை நீண்ட காலம் திரும்பத் தரப்படாமல் இருப்பதால் சேதமடைவதாகவும் பழனிசாமி கூறியுள்ளார். மீனவர்களையும், படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பிரதமரை எடப்பாடி கே பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.