தமிழ்நாடு

சமூகப் பணிகளில் அக்கறை காட்டியவர் ஜெயேந்திரர்: முதல்வர் இரங்கல்

சமூகப் பணிகளில் அக்கறை காட்டியவர் ஜெயேந்திரர்: முதல்வர் இரங்கல்

rajakannan

காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரர் மறைவிற்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள செய்தியில், காஞ்சி மடத்தின் 69ஆவது மடாதிபதியான ஜெயேந்திரர் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வருத்தம் அடைந்ததாகக் கூறியுள்ளார். காஞ்சிப் பெரியவர் மறைவிற்குப் பின் மடத்தை ஜெயேந்திரர் சிறப்பாக வழிநடத்தியதாகத் தெரிவித்துள்ள முதலமைச்சர், ஆன்மீகப் பணிகளோடு, சமூக முன்னேற்றப் பணிகளிலும் ஜெயேந்திரர் அக்கறை காட்டியவர் எனப் புகழாரம் சூட்டியுள்ளார். ஜெயேந்திரரை இழந்து வாடும் பக்தர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துள்ள முதலமைச்சர், அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல், காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மறைவுக்கு திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் உடல்நலக் குறைவால் திடீரென இயற்கை எய்திய செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்ததாக கூறியுள்ளார். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்ளும் அதேவேளையில், அவரை இழந்து வாடும் விசுவாசிகள் அனைவருக்கும் காஞ்சி சங்கர மடத்தின் பணியாளர்களுக்கும் தனது ஆறுதலை தெரிவித்துக் கொள்வதாக ஸ்டாலின் கூறியுள்ளார்.