ஆளுநர் ஆர்.என் ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் pt web
தமிழ்நாடு

“பதவியை தொடர வேண்டுமென நினைத்தால்...” ஆளுநரின் பதிலுக்கு முதலமைச்சரின் எதிர்வினை..

தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலை துல்லியமாக பாடுவேன் என கூறும் ஆளுநர் ஆர்.என்.ரவி, விழா மேடையிலேயே திருத்தியிருக்கலாமே என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

PT WEB

"தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலை துல்லியமாக பாடுவேன் என கூறும் ஆளுநர் ஆர்.என்.ரவி, விழா மேடையிலேயே திருத்தியிருக்கலாமே" என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், “தமிழ்த்தாய் வாழ்த்தை பக்திச்சிரத்தையோடு பாடுவேன் எனக் கூறும் ஆளுநர், முழுமையாக பாடப்படாத தமிழ்த்தாய் வாழ்த்தை உடனே நிறுத்தி, மேடையிலேயே கண்டித்திருக்க வேண்டாமா, அதனை ஏன் செய்யவில்லை? தவறை சுட்டிக்காட்டியிருந்தால் எதிர்வினை ஏற்பட்டிருக்குமா?” என வினவியுள்ளார்.

GovernorRNRavi MKStalin

மேலும் “இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தின் வரலாறுகளை தாங்கி நிறுக்கும் மண் தமிழ்நாடு. இந்த மண்ணின் தாய்மொழி பற்றை இனவாதம் என்றால் அது பெருமை.

பிரதமர் மோடி தலைமையிலான அரசு தமிழ்மொழி வளர்ச்சிக்காக கடந்த 10 ஆண்டுகளில் 167 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கியுள்ளது. அதே காலக்கட்டத்தில் சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்காக 2,435 கோடி ரூபாய் நிதியை செலவிட்டுள்ளது” முதலமைச்சர் விமர்சித்துள்ளார்.

ஆளுநர் ரவி கடந்த காலங்களில் பேசியதையும், அவரது செயல்பாடுகளையும் சுட்டிக்காட்டியுள்ள முதலமைச்சர், “அரசியல்சட்ட நெறிமுறைகளை மீறுவது எந்த வகை அரசியல் நாகரிகம்? எந்த வகை கண்ணியம்? சட்டப்பேரவையில் ஆளுநர் உரையில் சில தலைவர்களின் பெயர்களைத் தவிர்த்த நீங்கள், திராவிடநல் திருநாடு தவிர்க்கப்பட்டதைத் தற்செயலானது என கூறுவதை மக்கள் எப்படி நம்புவார்கள்?” எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

mk stalin, rn ravi

“பிளவுவாத அழிவு விஷக் கருத்துக்களைத் தமிழ்மண்ணில் விதைக்க நினைத்தால் அதன் வேரில் வெந்நீரை தமிழ்நாட்டு மக்கள் ஊற்றுவார்கள். ஆளுநர் பதவியில் தொடர நினைத்தால், அரசியல்சட்ட நெறிமுறைகளின்படி கடமையை ஆற்ற வேண்டும்” என கேட்டுக் கொண்டுள்ளார்.