தமிழ்நாடு

சென்னை விமான நிலையத்தில் பாஜகவின் கல்யாணராமன் கைது

webteam

தமிழக பாஜக பிரமுகர் கல்யாண ராமனை சென்னை விமான நிலையத்தில் வைத்து சைபர் கிரைம் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை நங்கநல்லூரை சேர்ந்தவர் கல்யாணராமன். இவர் தமிழக பாஜக நிர்வாகி ஆவார். கல்யாணராமன் ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை பகிரங்கமாக பேசக் கூடியவர். மேலும் பல இடங்களில் திராவிட இயக்க சித்தாந்தத்தை விமர்சித்துள்ளார். இந்நிலையில் சமூக வலைதளங்களில் தொடர்ந்து இஸ்லாமிய மதத்திற்கு எதிரான கருத்துக்களை பதிவிட்டு வந்ததாக கூறி இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக மாநில செயலாளர் சாஹிர்கான் சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்திருந்தார்.

அந்த மனுவில் ”பாஜகவை சேர்ந்த கல்யாணராமன் தனது முகநூல் பக்கத்தில் தொடர்ந்து இஸ்லாமியர்கள் உயிரினும் மேலாக மதிக்க கூடிய நபிகள் நாயகம் பற்றி தரக்குறைவான வார்த்தைகள் கொண்டு பதிவிட்டு வருகிறார். இவருடைய பதிவுகள் அனைத்தும் இஸ்லாத்தை கொச்சைப்படுத்தியே வருகிறது. இவரின் நோக்கம் இது போன்ற சர்ச்சைக்குரிய பதிவுகள் மூலம் முஸ்லீம் இளைஞர்களை வன்முறை பாதைக்கு மாற்ற வேண்டும் என்பதே ஆகும். ஆகையால் கல்யாணராமனை கைது செய்து தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் பல புகார்கள் சென்னை காவல்துறை ஆணையாளர் அலுவலகத்தில் கல்யாணராமன் மீது வந்துள்ளது.

இந்த புகாரின் அடிப்படையில் சென்னை சைபர் கிரைம் போலீசார் விசாரணை செய்து அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதனைதொடர்ந்து  இன்று காலை அகமதாபாத்லிருந்து சென்னை திரும்பிய கல்யாணராமனை சென்னை விமான நிலையத்தில் வைத்து சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.மேலும் அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.