Annamalai pt desk
தமிழ்நாடு

“தேர்தலில் வென்று 39 தொகுதிகளையும் மோடி கையில் ஒப்படைக்க வேண்டும்” - அண்ணாமலை பேச்சு

webteam

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சட்டமன்ற தொகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, என் மண் என் மக்கள் நடைப்பயணம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்... “தமிழகத்தில் மாற்றம் கேட்டு வந்த கேப்டன் விஜயகாந்த்-ஐ தேர்வு செய்த தொகுதி விருத்தாச்சலம். ஆட்சியாளர்கள் தவறு செய்யும் போது மாற்றம் கேட்டு வருபவர்களை அரவணைக்கும் தொகுதி விருத்தாசலம். 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் ஆட்சி மாற்றத்திற்கான முன்னோட்டமாக இந்த பாராளுமன்ற தேர்தல் இருக்க வேண்டும்.

Annamalai

இந்தியாவில் பிறந்த ஒரு ஏழை, மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு வரை ஏழு தலைமுறைகளாக ஏழையாகவே இருந்து வந்துள்ளார். ஏழைகள் நடுத்தர குடும்பமாக மாறுவதற்கு ஏழு தலைமுறைகள் தேவைப்பட்டது. இதற்கு காரணம் இந்தியாவிலும் தமிழகத்திலும் குடும்ப ஆட்சி நடப்பதுதான். தமிழகத்தில் திமுகவினர் குறு நில மன்னர்களாக உள்ளனர். தவறு செய்தால் திமுக ஊராட்சி மன்ற தலைவரை கூட கேள்வி கேட்க முடியாது. அந்த அளவிற்கு அடாவடித்தனமாக செயல்படுகிறார்கள். காமராஜருக்கு பிறகு இவர்கள் கொட்டத்தை அடக்க கேப்டன் வந்தார். ஆனால் இப்போது அவர் நம்முடன் இல்லை. இதுபோல அவ்வப்போது மாற்றத்தை ஏற்படுத்த தலைவர்கள் வருவார்கள்.

வாக்குறுதிகளைக் கூறி திமுகவினர் மக்களின் நம்பிக்கையை பெறலாம். ஆனால், ஓட்டு போட்ட பிறகு திமுகவினர் வசைபாடுவதில் வல்லவர்களாக உள்ளனர். திமுக கொடுத்து 511 தேர்தல் வாக்குறுதிகளில் 20 கூட நிறைவேற்றவில்லை. ஆனால் முதல்வர் முக.ஸ்டாலின் 99 சதவீதம் நிறைவேற்றியதாக கூறுகிறார். திமுக ஆட்சியில் மக்களுக்கு முன்னேற்றமே இல்லை. ஆனால், அமைச்சர்களுக்கும் அவர்களின் பினாமிகளுக்கும்தான் முன்னேற்றமாக உள்ளது. தமிழ்நாட்டில் அமைச்சர்களே குற்றவாளிகளாக இருக்கின்றனர். இதையெல்லாம் வேறு எங்கேயும் காண முடியாதது. வரப்போகின்ற தேர்தல் இந்தியாவில் இதுவரை நடக்காத தேர்தலாக இருக்க வேண்டும்.

PM Modi

அப்பாவின் பெயரை இனிஷியலாக போடுவது சாதனையல்ல. ஏழையாக பிறந்து தன்னை தகுதி படைத்தவராக மாற்றிய பிரதமர் மோடி செய்ததுதான் சாதனை. அதனால் நாம் போடும் ஓட்டால் பாராளுமன்றத்தில் எம்பிக்களின் எண்ணிக்கை 450 தாண்டி அமர வைத்து சாதிப்போம். உலக வரைபடத்தில் ஊழல் நாட்டையும் ஏழை நாட்டையும் தேடியது போக அடுத்த வல்லரசு எங்கே என தேட வைத்தவர் மோடி. மோடிக்கு விசா கொடுக்க மறுத்த அமெரிக்கா இன்று கைகட்டி இந்தியர்களுக்கு விசாவை கொடுத்து வருகிறது. கற்சிலைக்கு உயிர் கொடுக்க 11 நாட்கள் விரதம் இருந்தார் மோடி. ஒரு கற்சிலைக்கு உயிர் கொடுக்கவே 11 நாட்கள் விரதம் இருந்த அவர் நமக்கு பிரதமராக வேண்டுமென்றால் அவரது தகுதியை எப்படியெல்லாம் உயர்த்தி இருப்பார்.

விருத்தாச்சலத்தில் இருந்த அர்த்தநாரீஸ்வரர் சிலை காணாமல் போய், அது ஆஸ்திரேலியாவில் இருந்தது. அதனை சென்று மீட்டு வந்தவர் மோடி. இதுதான் சாதனை. 1976 இல் இருந்து திருடுபோன அனைத்து சிலைகளையும் மீட்டவர் மோடி. இந்த மண்ணுக்கும் மக்களுக்கும் மரியாதை கொடுப்பவர் மோடி. முன்னோர்கள் வணங்கிய சிலைகளை கலாச்சாரத்தை மீட்டுக் கொடுத்தவர் மோடி. தமிழ்நாட்டில் 39க்கு 39 தொகுதிகளையும் அவர் கரத்தில் நாம் கொடுக்க வேண்டும். இந்த முறை ஓட்டு மோடிக்குதான். ஏனென்றால் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சித் தொண்டர்களும் முடிவெடுத்து விட்டார்கள். எந்த வேட்பாளர் நின்றாலும் அவர் மோடியாகதான் உங்கள் முன்பு நிற்பார்.

cm stalin

மீண்டும் சரியான சமயம் கிடைக்காது. காலச்சக்கரத்தை மாற்றும் சமயம் இது. கேப்டனை தனி பெரும் ஆளுமையாக நீங்கள் நிறுத்தியது போல, தமிழகத்தில் மோடியை ஆளுமையாக நிறுத்த வேண்டும்” இவ்வாறு அவர் பேசினார்.