Annamalai RS Bharathi pt desk
தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணம்: ரூ.1 கோடி கேட்டு ஆர்.எஸ்.பாரதி மீது அண்ணாமலை அவதூறு வழக்கு!

webteam

கள்ளக்குறிச்சியில் கடந்த மாதம் விஷ சாராயம் அருந்தி 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பேட்டியளித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, “கள்ளச்சாராயம் அங்கு கொண்டுவரப்பட்டதில் சந்தேகம் உள்ளது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கள்ளச் சாராயத்தை கொண்டு வந்து உயிரிழப்பை ஏற்படுத்தி இருக்கலாம்” என்று தெரிவித்திருந்தார்.

Annamalai

ஆர்.எஸ்.பாரதியின் இந்தக் குற்றச்சாட்டை தொடர்ந்து மானநஷ்டஈடு ரூ.1 கோடி ரூபாய் கேட்டும், நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் எனக் கூறியும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ஆர்.எஸ்.பாரதிக்கு கடந்த 26 ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பினார். மூன்று நாட்களுக்குள் இதற்கு பதிலளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இதற்கு ஆர்எஸ்.பாரதி தரப்பு இன்னும் விளக்கம் அளிக்கவில்லை.

ஆர்எஸ்.பாரதி மீது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவதூறு வழக்கு:

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரத்தில் தன்னை கலங்கப்படுத்தும் வகையில் பேசியதால் மனவேதனை அடைந்துள்ளதால் ஆர்எஸ்.பாரதி மீது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சென்னை சைதாப்பேட்டை பெருநகர குற்றவியல் 17-ஆவது நடுவர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். அண்ணாமலை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி நீதிபதி அனிதா ஆனந்தனிடம் அவதூறு வழக்கை இன்று தாக்கல் செய்தார்.

Kallakurichi

“என் மீது பொய்யான குற்றச்சாட்டை ஆர்.எஸ்.பாரதி வைத்துள்ளார்” - அண்ணாமலை

அதைத்தொடர்ந்து அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது... “கள்ளக்குறிச்சி விஷ சாராயம் உயிரிழப்பு சம்பவத்தில் என் மீது சந்தேகம் இருப்பதாகவும் சாராயத்தை கடத்தி வந்து உயிரிழப்பு ஏற்படுத்தியதாக ஆர்.எஸ்.பாரதி பேட்டி அளித்தது மனவேதனை ஏற்படுத்தி உள்ளது. என் மீது பொய்யான குற்றச்சாட்டை ஆர்.எஸ்.பாரதி வைத்துள்ளார். தமிழகத்தில் திமுகவினர் இது போன்ற பொய்யான குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகின்றனர். ஆனால், யாரும் அவர்களுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடுப்பது இல்லை. நானும் கடந்த மூன்று ஆண்டுகளில் இதுவரை யார் மீதும் அவதூறு வழக்கு தாக்கல் செய்தது இல்லை.

“முதல்முறையாக அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளேன்”

ஆனால், ஆர்எஸ்.பாரதி, 30 ஆண்டுகளுக்கு மேலான அரசியல் அனுபவம் கொண்டிருந்தாலும் பொய்யான அவதூறுகளை பரப்பி வருவதை ஏற்க முடியாது. ஆகவே முதன்முறையாக அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளேன். குறிப்பாக எனக்கு ஏற்பட்ட மான நஷ்டத்திற்கு ரூபாய் ஒரு கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும். மேலும் ஆர்.எஸ்.பாரதி மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளேன். நஷ்ட ஈடாக வழங்கப்படும் ஒரு கோடி ரூபாயில், கள்ளக்குறிச்சி விஷ சாராயத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு மையம் கட்டப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளேன்.

“செல்வப் பெருந்தையே ரவுடி லிஸ்டில் இருந்தவர் என்று கூறினேன்”

Selvaperunthagai

குறிப்பாக ஆர்.எஸ்.பாரதியையும் திமுக பிரமுகரையும் சிறைக்கு அனுப்பாமல் விடமாட்டேன்.

ஆர்.எஸ்.பாரதி என்னை சின்ன பையன் என்கிறார். இந்த சின்ன பையன் என்ன செய்யப் போகிறேன் என்று பாருங்கள்.

செல்வப் பெருந்தகையை பொறுத்தவரையில் அவர்தான் முதலில் ஆரம்பித்தார். அதாவது ‘பாஜகவில் ரவுடிகள் சேர்கிறார்கள்’ என்று செல்வப் பெருந்தகைதான் முதலில் கூறினார். அதற்குதான் நான் செல்வப் பெருந்தையே ரவுடி லிஸ்டில் இருந்தவர் என்று கூறினேன். அவருடைய கடந்த கால வாழ்க்கையை கூறினேன்.

“லண்டனில் செல்வப் பெருந்தகை வாங்கிய சொத்து குறித்த விவரங்களை தெரிவிக்கிறோம்”

அவர் மீதான வழக்குகளை கூறியுள்ளேன். செல்வப் பெருந்தகை தற்பொழுது பசுந்தோல் போர்த்திய புலியாக இருக்கிறார். அதனால் அவரது விவரங்களை தெரிவிக்க வேண்டியது அவசியமானது. அதே நேரத்தில் என் மீது அவதூறு வழக்கு தொடர்வேன் என்று செல்வப் பெருந்ததை கூறி இருக்கிறார். என் மீது வழக்கு தொடரட்டும். லண்டனில் செல்வப் பெருந்தகை வாங்கிய சொத்து குறித்த விவரங்களை தெரிவிக்கிறோம். ஆடிட்டர் கொலை வழக்கு விவரங்களை தெரிவிக்கிறோம். செல்வபுரம் குறித்த எல்லாவற்றையும் வெளியிடுவோம்.

“நாங்கள் எப்போதும் தமிழ்நாட்டுக்கும் தமிழர்களுக்கும் எதிரி கிடையாது”

அண்ணாமலை

கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி நாணயம் வெளியிடுவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. நாங்கள் எப்போதும் தமிழ்நாட்டுக்கும் தமிழர்களுக்கும் எதிரி கிடையாது. பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை பொறுத்தவரையில் உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும் என்று திருமாவளவன் உட்பட எல்லோரும் வலியுறுத்துகிறார்கள். அதேபோன்று சிபிஐ விசாரணை வேண்டும் என்று மாயாவதி உள்ளிட்டோர் கேட்டுள்ளனர். இருந்தாலும் சிபிஐ விசாரணைக்கு வழக்கை மாற்றவில்லை.

அதேபோல கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட்டால் டாஸ்மாக்கில் எவ்வளவு விற்பனை நடக்கிறது, எங்கிருந்தெல்லாம் மதுபானங்கள் வருகின்றன போன்ற அனைத்து விவரங்களையும் எடுத்து விடுவார்கள். அதனால் சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைக்கவில்லை. சிபிஐக்கு தடையாக இருக்கிறார்கள். முதலமைச்சருக்கு மடியில் கனம் உள்ளது. அதனால்தான் சிபிஐ நேரடியாக விசாரணை நடத்துவதற்கான அனுமதி தமிழகத்தில் மறுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.