தமிழ்நாடு

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முன்கூட்டியே நடத்தப்பட வாய்ப்பு!

JustinDurai

தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களில் வருகிற ஏப்ரல், மே மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில், முன்கூட்டியே தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு. புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை பொதுத் தேர்தல் இந்த ஆண்டு நடக்க உள்ளது. இதற்கான அடிப்படை பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, கொரோனா தடுப்பு பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி தேர்தல் நடத்தப்படுவதால், கூடுதலாக வாக்குச்சாவடிகள் அமைத்தல், அதற்கான இடங்களை தேர்வு செய்தல், வாக்காளர் பட்டியல் தயாரிப்பு உள்ளிட்ட பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

வழக்கமாக மார்ச் மாதம் பள்ளி மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் நடத்தப்படும். கொரோனா பரவல் காரணமாக பல்வேறு மாநிலங்களில் இதுவரை பள்ளிகள் திறக்கப்படாவிட்டாலும், பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று அந்தந்த மாநில அரசுகள் அறிவித்துள்ளன.

எனவே, பொதுத் தேர்வுகளுக்கு இடையூறு இல்லாத வண்ணம், ஏப்ரல் மாதத்திற்குள் சட்டப்பேரவைத் தேர்தலை நடத்தி முடிக்க பரிசீலனை செய்யப்பட்டு வருவதாகவும், பிப்ரவரி மாத மத்தியில் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகும் என்றும் தேர்தல் ஆணையம் தரப்பிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், தேர்தல்களில் மத்திய படை பாதுகாப்பு குறித்து மத்திய அரசுடன் தேர்தல் கமிஷன் ஆலோசனை நடத்தியுள்ளது. 5 மாநில தேர்தலிலும் வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்ப, தேர்தல் பணியாளர்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படும் என்று தெரிகிறது.