தமிழ்நாடு

தேர்தல் முடிந்தால் ஆட்சி கலையுமா ? - ஊசலாடும் எம்.எல்.ஏக்கள் கணக்கு..!

தேர்தல் முடிந்தால் ஆட்சி கலையுமா ? - ஊசலாடும் எம்.எல்.ஏக்கள் கணக்கு..!

webteam

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும் என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ள நிலையில், அதற்கான சாத்தியங்களை காணலாம்.

தமிழகத்தில் தற்போது 212 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். மீதமுள்ள 22 தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படவுள்ளது. இந்தத் தேர்தல் முடிந்தவுடன் தமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 230 ஆக உயரும். அப்போது ஆளுங்கட்சி பெரும்பான்மையை நிரூபிக்க 116 இடங்கள் வேண்டும். தற்போதைய நிலவரப்படி அதிமுகவில் சபாநாயகர் தவிர்த்து 110 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இதில் கள்ளக்குறிச்சி பிரபு, விருத்தாசலம் கலைச்செல்வன், அறந்தாங்கி ரத்தினசபாபதி ஆகியோர் டிடிவி தினகரன் அணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். 

மேலும், டிடிவி தினகரன் ஒரு சுயேட்சை எம்.எல்.ஏ-வாக உள்ளார். இதுதவிர அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வென்ற கருணாஸ், தமீமுன் அன்சாரி மற்றும் தனியரசு ஆகியோர் உள்ளனர். இந்த மூன்று பேரில் தனியரசு மட்டுமே அதிமுக ஆதரவு. இதுதவிர திமுக கூட்டணி எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை திமுக 88, காங்கிரஸ் 8, முஸ்லிம் லீக் 1 என மொத்தம் 97 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இதனால் தேர்தல் முடிந்த பின்னர் நிலையான ஆட்சியை பெற வேண்டுமென்றால் அதிமுக குறைந்தபட்சம் 7 தொகுதியிலாவது வெற்றி பெற வேண்டும்.

தமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை = 234

காலியாக உள்ள தொகுதிகள் = 22

இதில் இடைத்தேர்தல் நடத்தப்படும் தொகுதிகள் = 18

அதிமுக எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை = 111 (சபாநாயகர் சேர்த்து)

அதிமுக சின்னத்தில் வென்றவர்கள் (கருணாஸ், தமீமுன் அன்சாரி, தனியரசு) = 3

திமுக கூட்டணி எம்.எல்.ஏக்கள் = 97

டிடிவி தினகரன் சுயேட்சை = 1

அதிமுகவின் 111 பேரில் டிடிவி ஆதரவாளர்கள் 3 பேரை நீக்கினால் 108. தனியரசை சேர்த்தால் 109. எனவே பெரும்பான்மையை குறைந்த பட்சம் 7 தொகுதிகளிலாவது வெற்றி பெறவேண்டும்.